ரோகித் சர்மா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகி.. ரசிகர்கள் எதிர்ப்பு

இந்திய கேப்டன் ரோகித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது கூறிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-03-03 13:48 IST

image courtesy: PTI

புதுடெல்லி,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.

லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நாளை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன.

முன்னதாக நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் அவரை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஷாமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், "விளையாட்டு வீரராக பார்த்தால் ரோகித் சர்மா அதிக உடல் எடை கொண்டவராக இருக்கிறார். அவர் தனது எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக, இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகவும் ஈர்க்கப்படாத கேப்டன் அவர்" என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஷாமா முகமது தனது பதிவை உடனடியாக நீக்கினார். இருப்பினும் தற்போது வரை ரசிகர்கள் ஷாமா முகமதை விமர்சனம் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்