தோனி முதலில் போனை எடுத்தாரா...? இந்திய முன்னாள் வீரர் கிண்டல்

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியை ஆலோசகராக நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.;

Update:2025-08-31 18:26 IST

image courtesy:PTI

மும்பை,

2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. இதில் தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன.

இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.

மேலும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின. அத்துடன் இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாகவும் கூறப்பட்டது. சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு தோனி ஆலோசகராக செயல்படுவது உதவிகரமாக இருக்குமென பி.சி.சி.ஐ. கருதுகிறது.

இந்நிலையில் இந்த தகவல்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கிண்டலடித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இதற்கு காலம்தான் பதில் சொல்லும். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் அவர் போனை எடுத்தாரா? ஏனெனில், அவரை போனில் தொடர்பு கொள்வது கடினம். அவரிடமிருந்து செய்திகளுக்கு பதில் வருவதும் மிகவும் அரிது; பல வீரர்கள் இதை கூறியுள்ளனர். அவர் செய்தியை படிப்பாரா இல்லையா? என்பது நமக்கு தெரியாது.

முதல் விஷயம், அவர் இந்த பொறுப்பை ஏற்பாரா இல்லையா என்பதுதான். அவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஒரு கேப்டனாகவும், வீரராகவும் அவரது அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இன்று வளர்ந்து வரும் புதிய வீரர்களும், வரவிருக்கும் நட்சத்திரங்களும் அவரை மிகவும் மதிக்கின்றனர். எம்.எஸ். தோனி மற்றும் கவுதம் கம்பீரின் ஜோடி பார்க்கத் தகுந்ததாக இருக்கும்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்