பிட்ச் குறித்து பாக்.பயிற்சியாளர் அதிருப்தி.. வங்காளதேச வீரர் பதிலடி

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.;

Update:2025-07-22 08:03 IST

image courtesy:twitter/@BCBtigers

மிர்புர்,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 44 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்வேஸ் ஹூசைன் எமோன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா 2 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வங்காளதேச பேட்ஸ்மேன் பர்வேஸ் ஹூசைன் எமோன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் என்று பயிற்சியாளர் மைக் ஹெசன் அதிருப்தி தெரிவித்தார். மிர்புர் பிட்ச் சர்வதேச தரத்திற்கு ஏற்ற அளவில் இல்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மைக் ஹெசனின் இந்த கருத்திற்கு வங்காளதேச வீரர் பர்வேஸ் ஹூசைன் எமோன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அப்படி எதுவும் இல்லை (மிர்புர் பிட்ச் சர்வதேச தரத்திற்கு ஏற்ற அளவில் இல்லை). நாங்கள் 16 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தோம். நாங்கள் 20 ஓவர்கள் விளையாடியிருந்தால், 160 ரன்கள் எடுத்திருக்க முடியும். அதனால், எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் அணியால் பிட்ச்சுக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் பிட்சை சரியாக கணித்து எங்களுடைய திட்டங்களை செயல்படுத்தினோம்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்