சதமடித்ததும் மைதானத்தில் இருந்த கவாஸ்கர் வைத்த கோரிக்கை.. ஜாலியாக நிராகரித்த பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் பண்ட் சதம் விளாசினார்.;
லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நின்றனர். இந்த சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 8 ரன்களில் அவுட்டானார்.
இதனையடுத்து கே.எல்.ராகுல் - பண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசி அசத்தினர். சதமடித்த சிறிது நேரத்திலேயே பண்ட் 118 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சிலும் சதமடித்த பண்ட், 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். முதல் போட்டியில் சதம் விளாசியதை பண்ட் தனது ஸ்டைலில் டைவ் அடித்து கொண்டாடினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் சதமடித்ததையும் அதே ஸ்டைலில் டைவ் அடித்து கொண்டாடும்படி மைதானத்தில் இருந்த இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்தார். இருப்பினும் அடுத்த முறை அப்படி கொண்டாடுவதாக பண்ட் ஜாலியாக சிக்னல் செய்து நிராகரித்தார். கவாஸ்கரும் சிரித்தபடியே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.