தோனியின் நீண்டகால சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (35) விளாசிய சாதனையை பண்ட் படைத்துள்ளார்.;
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் 3-வது நாளான இன்று, இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட், புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (35 சிக்சர்கள்) விளாசிய பெருமையை பெற்றுள்ளார். இதனால் அவர் வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரரான விவியன் ரிச்சர்ட்சை (34 சிக்சர்கள்) பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.
இதேபோன்று டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 88 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மாவுக்கு இணையாக உள்ளார். அதுவும் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். ரோகித் 67 போட்டிகள் விளையாடி உள்ளார். இந்த வரிசையில் சேவாக் (90 சிக்சர்கள்) முதல் இடத்தில் உள்ளார்.
3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் (416 ரன்கள்) எடுத்த இந்திய விக்கெட் கீப்பராகவும் பண்ட் உள்ளார். இதனால், தோனியின் (349 ரன்கள்) நீண்ட கால சாதனையை பண்ட் முறியடித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது, தோனி இந்த சாதனையை ஏற்படுத்தினார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இச்சாதனையை தோனி தன்வசம் வைத்திருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்பு தோனியின் இந்த சாதனையை பண்ட் முறியடித்து இருக்கிறார்.