கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்... வெற்றியை நோக்கி இந்தியா ஏ

தென் ஆப்பிரிக்கா ஏ அணி 2-வது இன்னிங்சில் 199 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;

Update:2025-11-01 19:12 IST

image courtesy:PTI

பெங்களூரு,

இந்தியா ‘ஏ’- தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணியில் ஆயுஷ் மாத்ரே (65 ரன்), சாய் சுதர்சன் (32 ரன்) நல்ல தொடக்கம் தந்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர். காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய கேப்டன் ரிஷப் பண்ட் (17 ரன்), தேவ்தத் படிக்கல் (6 ரன்), ரஜத் படிதார் (19 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 58 ஓவர்களில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 234 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் பிரனலன் சுப்ராயன் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து மொத்தம் 105 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஜோர்டன் 12 ரன்களுடனும், லெசெகோ செனோக்வானே 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ 2-வது இன்னிங்சில் 199 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லெசெகோ செனோக்வானே மற்றும் ஹம்சா தலா 37 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. சாய் சுதர்சன் 12 ரன்களிலும், ஆயுஷ் மாத்ரே 6 ரன்களிலும், படிக்கல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கை கோர்த்த கேப்டன் ரிஷப் பண்ட் - படிதார் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. படிதார் நிதானமாக ஆட ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக விளையாடினார்.

காயத்திலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்த பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த படிதார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆயுஷ் பதோனி களமிறங்கினார்.

3-வது நாள் முடிவில் இந்தியா ஏ 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் அடித்துள்ளது. ரிஷப் பண்ட் 64 ரன்களுடனும், ஆயுஷ் பதோனி ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.

இந்தியா வெற்றி பெற இன்னும் 156 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் கைவசம் இன்னும் 6 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்