டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூர்- சேலம் அணிகள் இன்று மோதல்
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது.;
Image Courtesy: @TNPremierLeague
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். கோவையில் நடந்த முதல் கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.
முதல் 8 ஆட்டங்கள் முடிவில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் 4 புள்ளிகளுடன் முறையே முதல் இரு இடங்களில் இருக்கின்றன. திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. இரு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் அணிகள் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.
இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். தொடர்ந்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் சேலத்தில் ஆரம்பமாகிறது. வருகிற 19-ந் தேதி வரை அங்கு 9 ஆட்டங்கள் நடக்கிறது. வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அபிஷேக் தலைமையிலான சேலம் அணி முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரையையும், 2-வது ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் திருச்சியையும் தோற்கடித்தது. சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி கண்டது. அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை துவம்சம் செய்தது.
சேலம் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் வெற்றி உத்வேகத்தை தொடர திருப்பூர் அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.