முத்தரப்பு டி20 தொடர்: நவாஸ் ஹாட்ரிக்.. ஆப்கானிஸ்தானை சுருட்டி கோப்பையை வென்ற பாகிஸ்தான்
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை முகமது நவாஸ் கைப்பற்றினார்.;
image courtesy:ICC
சார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் சார்ஜாவில் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. யுஏஇ அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இந்த சூழலில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பகர் ஜமான் 27 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்ப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாசின் சுழலில் ஆப்கானிஸ்தான் கொத்தாக விக்கெட்டுகளை தாரை வார்த்தது.
15.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 66 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 17 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை முகமது நவாஸ் கைப்பற்றினார்.