விராட், ரோகித் தொடர்ந்து விளையாட வேண்டும்.. ஏனெனில் சுப்மன் கில்லுக்கு.. - இந்திய முன்னாள் வீரர்
ரோகித் மற்றும் விராட் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.;
image courtesy:PTI
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்களை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.
அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில் ஒரு நாள் போட்டி அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “ரோகித் சர்மா, விராட் கோலியின் அனுபவம் மிகவும் முக்கியமானது. சீனியர்களான அவர்கள் இருவரும் ஜூனியர் வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர்களுடன் இணைந்து தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம். சுப்மன் கில் உண்மையிலேயே நன்றாக செயல்படுகிறார். ஆனால் அவருக்கு ரோகித், கோலி போன்ற அனுபவ வீரர்கள் தேவை. அவர்கள் இருவரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்று இருக்கிறார்கள். விராட் கடந்த ஐ.பி.எல். கோப்பையை வென்றார். அத்துடன் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் கேப்டன்ஷிப்பிலும் அசத்திய அவர்கள் இந்த இளம் இந்திய அணியின் ஓய்வறையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
அத்துடன் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது சிராஜ் 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.