கும்பம் - ஆடி தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் -  ஆடி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 16 July 2023 6:45 PM GMT (Updated: 16 July 2023 6:46 PM GMT)

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை

உழைப்பையே மூலதனமாக்கி செயல்படும் கும்ப ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்க்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். மனநிலையில் மாற்றம் ஏற்படும். தொடக்கத்தில் வேகமாகச் செய்த வேலையை நிறுத்திவிடுவீர்கள். பல வேலைகள் அரைகுறையிலேயே நிற்கக்கூடும். எனவே திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வழிபாட்டின் மூலமே வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளலாம்.

மேஷ - குரு சஞ்சாரம்

நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன - லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். அதே நேரம் ராகுவோடு இணைந்திருப்பதால், குருவால் ஓரளவே நன்மை செய்ய இயலும். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. 7-ம் இடம் களத்திர ஸ்தானம் என்பதால் குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். கடுமையாக முயற்சித்தும் முடிவடையாத திருமணங்கள் இப்போது நடைபெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானம் கிடைக்கலாம்.

குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் புனிதமடைகிறது. எனவே தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த கோவில்களைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்வீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். லாப ஸ்தானம் பலம்பெறுவதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். வரும் வாய்ப்புகள் எல்லாம் வளர்ச்சிக்குரியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிம்ம - புதன்

ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் களத்திர ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகளின் திருமணப் பேச்சுக்கள் திடீரென முடிவாகும். வெளிநாடு சென்று படிக்கவோ, வேலை பார்க்கவோ நினைக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு அது கைகூடும். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் பெறுவதற்கான அறிகுறி தென்படும். கலைஞர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. மாணவ - மாணவியர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்கு எதையும் யோசித்து செய்ய வேண்டிய காலகட்டம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. வீண்பழிகளுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 25, 26, 30, 31, ஆகஸ்டு: 6, 7, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.


Next Story