கும்பம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை

நட்பால் நன்மை உண்டு என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வக்ரம் பெற்று விளங்குகின்றார். விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், ராசிநாதனாகவும் சனி விளங்குவதால் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது. கூடுதல் விரயங்கள் வந்தாலும் அதற்கேற்ப வருமானங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். 2-ல் ராகு இருப்பதால் தொழில் வளர்ச்சியும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

சனி வக்ர நிவர்த்தி!

ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் உடல்நலம் சீராக வழிபிறக்கும். அதே நேரம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும் விரயங்களைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். வீண் விரயங் களிலிருந்து விடுபட்டு சுபவிரயங்களை மேற்கொள்ளவும் முயற்சிப்பது நல்லது, இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் முதலீடு செய்யலாம். திருமண வயதடைந்த பெண் குழந்தைகளுக்கு சீர்வரிசைப் பொருள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.

குரு வக்ரம்!

மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு தனலாபாதிபதியாக விளங்கும் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணத்தட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற காலங்களில் பிறருக்கு பணப்பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். இளைய சகோதரத்தோடு இருந்த உறவில் விரிசல்கள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

நீச்சம் பெறும் சுக்ரன்!

ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர்களின் ஆதரவு குறையும். பணநெருக்கடி காரணமாக வாங்கிய இடத்தை விற்க நேரிடும். வாகனப் பழுதுகளின் காரணமாக வாட்டம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகலாம். கவனம் தேவைப்படும் நேரமிது.

விருச்சிக புதன்!

ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் 10-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வியாபார அபிவிருத்தி உண்டு. பொருளாதார நிலை சீர்படும். சருமப் பிரச்சினைகள் தகுந்த சிகிச்சையினால் குணமடையும். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். வியாபரம் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும் நேரம் என்பதால் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 27, 28, நவம்பர் 1, 2, 3, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.


Next Story