கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 July 2022 10:16 PM IST (Updated: 16 July 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் கும்ப ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். வெற்றிகள் ஸ்தானத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். எனவே விரயங்கள் அதிகரிக்கும்.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சம -அஷ்டமாதிபதியான அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தொழிலில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர் களால் சிறு தொல்லைகள் வரலாம்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மேம்பாட்டிற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. தனாதிபதி குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். புதிய மனிதர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கலாம். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றம் வரக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது ஆலோசித்து முடிவெடுங்கள்.

லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாக குரு விளங்குவதால், லாபம் வருவதில் சிறு குறுக்கீடு ஏற்படும். பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். தொழில் பிரச்சினை அதிகரிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றவர்களுக்குப் போகலாம்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 4-ம் இடத்திற்கு வரும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். உடன்பிறந்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் ராமபிரான், சீதா தேவி வழிபாடு செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 23, 24, ஆகஸ்டு: 4, 5, 9, 10, 11, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரயச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. சனி வக்ரம் பெற்றிருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் வழியிலும், உறவினர்கள் வழியிலும் பிரச்சினைஉருவாகலாம். பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


Next Story