கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்


கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Aug 2022 6:33 PM IST (Updated: 16 Aug 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை

எந்த காரியத்திலும் யோசித்து முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் விரயாதிபதி சனி, விரய ஸ்தானத்திலேயே வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே வரவும், செலவும் சமமாகும்.

சிம்ம - சூரியன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியன், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். செல்வநிலை திருப்தி தரும். சுபகாரியங்கள் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் நிலவிய வாக்குவாதம் சுமுகமாகும். பெற்றோரின் உடல்நலம் சீராகும்.

கன்னி - புதன் சஞ்சாரம்

ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், உச்சம் பெறும் போது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். பாகப்பிரிவினையில் இருந்த தடை அகலும். பணிபுரியும் இடத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.

வக்ர புதன் சஞ்சாரம்

ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவதால் நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் தலைதூக்கும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். அண்ணன், தம்பிகளுக்குள் அனுசரணை அவசியம். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச்சுமை கூடுதலாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அலுவலகத்தில் கேட்டிருந்த சலுகைகள் கிடைக்கப்பெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.

குரு வக்ரமும், சனி வக்ரமும்

மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான குரு வக்ரம் பெறும்போது பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல் -வாங்கலில் பிரச்சினைகள் உருவாகும். சனியின் வக்ர இயக்கத்தைப் பொறுத்தவரை நன்மை தரக்கூடியதாக இருக்கும். விரயாதிபதி சனி வக்ரம் பெறும் போது, வீடு கட்டுவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கடன்சுமை ஓரளவு குறையும்.

இந்த மாதம் சனிக்கிழமை தோறும் கிருஷ்ணர் வழிபாடு நன்மையைத் தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 19, 20, 31, செப்டம்பர்: 1, 5, 6, 12, 13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, புதிய இடத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் வரலாம். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் புதிய வேலையில் சேரலாமா? என்பதை சுய ஜாதகம் பார்த்து முடிவெடுங்கள்.


Next Story