கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை அடிக்கடி கேட்கும் இயல்புடைய கும்ப ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதிர்பாராத விதத்தில் விரயங்கள் ஏற்படும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது உடன்பிறப்புகளின் முன்னேற்றம் திருப்தி தரும். செவ்வாய் குருவோடு இணைவதால் 'குருமங்கள யோகம்' உருவாகிறது. எனவே நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகின்றார். எனவே இக்காலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்கும். விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாவதால் பிள்ளை கள் வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். வீடுமாற்றம் செய்ய முன்வருவீர்கள். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலத்தில் 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புனிதப் பயணங்களும் உண்டு.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நன்மைகள் அதிகம் கிடைக்கும். குறிப்பாக இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொருளாதாரத்தில் மேம்பாடு அதிகரிக்கும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
மகரச் சனியின் வக்ர காலம்
வைகாசி 11-ந் தேதி, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். என்றாலும் கூட ராசிநாதனாகவும் சனி இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அனுபவஸ்தர்களை ஆலோசித்துச் செய்வது நல்லது. உறவினர்களுக்கு உதவி செய்யப் போய், அது உபத்திரவமாய் முடியலாம். பணிபுரியும் இடத்தில் பக்குவமாய் நடந்துகொள்வது நல்லது. நண்பர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. தடைப்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, 27, 28, ஜூன்: 2, 3, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரயச் சனியின் ஆதிக்கத்தால் குடும்பச் சுமை கூடும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் வழியில் நல்ல காரியங்கள் நடைபெறும். சுபவிரயங்கள் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. சகப் பணியாளர்களால் சில தொல்லைகள் ஏற்படலாம்.