கும்பம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
8.10.2023 முதல் 25.4.2025 வரை
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதே நாளில் கேது பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசார அடிப்படையில் பலன்களை வழங்குவார்கள்.
உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு வரும் ராகுவால், தன வரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகுவர். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பச்சுமை கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உடல்நலக் குறைபாடு ஏற்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்ளலாம். தைரியமும், தன்னம்பிக்கையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் பணத்தேவை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த சுமுகமான நிலை மாறும். உடன்பிறப்புகளின் வழியே மனக்கசப்பு உண்டாகக்கூடும். உத்தியோகத்தில் இடமாறுதல் திருப்தி தராது.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண்பழி வந்துசேரும். அசையாச் சொத்துக்களை வாங்குவதில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியப் பாதிப்பும் உண்டு. குடும்பப் பெரியவர்களைகலந்து பேசி முடிவெடுங்கள்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் உங்களுக்கு ஜென்மச் சனியின் ஆதிக்கம் உருவாகிறது. எனவே தடை, தாமதம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் செலவை தவிருங்கள்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிப்படி அவர் அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும், அவர் பார்வைபடும் 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
பெண்களுக்கான பலன்கள்
இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். அதே நேரம் விரயங்கள் ஏற்பட்டு சேமிக்க இயலாமல் போகலாம். எனவே சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரணை இருந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இரண்டாம் இடத்து ராகுவால் இனிய பலன் கிடைக்கவும், அஷ்டமத்து கேதுவால் ஆரோக்கியத் தொல்லை அகலவும், இல்லத்து பூஜையறையில் நாக கவசம் பாடி ராகு-கேதுக்களை வழிபாடு செய்யுங்கள்.