கும்பம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


கும்பம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:33 PM IST (Updated: 17 May 2022 1:35 PM IST)
t-max-icont-min-icon

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்

மூன்றில் வருகிறது ராகு; முன்னேற்றப் பாதை தேடிவரும் கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அா்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதே சமயம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு வரப்போகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

மூன்றாம் இடத்தில் ராகு, ஒன்பதாம் இடத்தில் கேது

இந்த ராகு-கேது பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார், ராகு பகவான். அந்த இடத்திற்கு ராகு வரும்பொழுது வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். வெற்றிக்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பங்காளிப் பகை மாறும். 9-ல் சஞ்சரிக்கும் கேதுவால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய நல்ல தகவல் வரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்பால் உங்கள் கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும் கிடைக்கும். சப்தமாதிபதியாக சூரியன் இருப்பதால், எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். திடீர் தனவரவும் உண்டு. ஒரு சிலருக்கு அரசு வழியில் கவுரவப் பதவிகள் கிடைக்கலாம். வெளிநாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம்.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உங்களுக்கு யோகம் நிறைந்த நேரம் ஆகும். மனக்குழப்பங்கள் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை முறையான பாகப்பிரிவினைகள் செய்து கொண்டு அதில் கட்டிடம் கட்டும் முயற்சி கைகூடும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுக்கள் கைகூடும்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். பணவரவில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சியை முன்னிட்டு நவீனப் பொருட்களை, இயந்திரங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து நடைபெறாத காரியமொன்று இப்பொழுது நடைபெறலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, மிகவும் அற்புதமான நேரமாக அமையும். தன-லாபாதிபதியாக குரு இருப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆதாயம் தரும் தகவல்களை அதிகமாகவே கேட்டு மகிழ்வீர்கள். 'போதிய வருமானம் இல்லையே' என்று நினைத் தவர்களுக்கு இப்பொழுது புதிய வாய்ப்பு கைகூடி வரும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. தூர தேசப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உதிரி வருமானங்கள் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்று மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருப்பர். தொழிலை விரிவுசெய்ய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் இந்தக்காலத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகற்கள் அகலும். கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை இப்பொழுது குறையலாம். தொழிலில் நெருக்கடிகள் இருந்தாலும் முதலீட்டை எடுத்துவிட முடியும். மாற்று இனத்தவர் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 'வீடு வாங்க வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு, அது நிறைவேறும். பெற்றோர்களின் உடல்நலம் சீராகும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு செல்லும் குரு, அங்கிருந்து உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் தொல்லை அகலும். அடுத்ததாக 22.4.2023 அன்று மேஷத்திற்கு பெயர்ச்சியாகி, உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே சுபச்செலவுகள் அதிகரிக்கும். மங்கல ஓசை மனையில் கேட்கும். மகப்பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கலாம். ஆரோக்கியம் சீராகும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிநாதன், உங்கள் ராசிக்கு வரும் இந்த நேரம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியாக வருகிறது. எனவே கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. அதிக விரயங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். சொத்து தகராறுகள், சொந்த பந்தங்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஏழரைச் சனியில் இரண்டாவது சுற்று நடைபெறுபவர்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு வருமானத்தைப் போதுமானதாக அமைத்துக் கொடுக்கும். சகோதரர் களால் நன்மை கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. பூமி வாங்கும் யோகம் ஏற்படும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்பும், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியும் வெற்றி தரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றமோ, இடமாற்றமோ கிடைக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பதவி உயர்வு உண்டு.


Next Story