மேஷம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை
விடாமுயற்சியே வெற்றி தரும் என்று கூறும் மேஷ ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. கன்னி ராசியில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எண்ணிய காரியங்கள் நடந்தேற ஏராளமாகச் செலவிடும் சூழல் உருவாகும்.
புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் புரட்டாசி மாதம் 10-ந் தேதி கன்னி ராசியில் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். புதன் வலிமை இழந்திருப்பது யோகம்தான். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பது ஆறாம் இடமாகும். அந்த இடத்திற்கு அதிபதி வலிமை இழக்கும் பொழுது எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். உடல்நலம் முற்றிலும் சீராகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். கடன்சுமை குறையப் புதிய வழிபிறக்கும். தொடர்ந்து பொருளாதார பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு, இப்பொழுது சரளமான பணப்புழக்கம் ஏற்பட்டு சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
துலாம் - செவ்வாய்
புரட்டாசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். மேலும் குரு பார்வையால் குருமங்கல யோகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக காலம் காலமாக காத்திருந்தும் நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுதுபார்ப்பது போன்றவற்றிலும் கவனம் செலுத்த இயலும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு பணிபுரியச் செல்லலாமா?' என்று சிந்திப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல காரியம் நடைபெறும். தொழில் வெற்றி நடைபோடும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலையை உயர்த்த வழிவகுத்துக் கொடுப்பர்.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் சப்தம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். மாமன், மைத்துனர் வழியில் சுமுகமான உறவு ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணங்களால் பலன் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய பங்குதாரர்களால் வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். மாணவ-மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பா்: 23, 24, 27, 28, அக்டோபர்: 4, 5, 8, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.