மேஷம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
8.10.2023 முதல் 25.4.2025 வரை
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த ராகு பகவான் அக்டோபர் 8-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் கேது 6-ம் இடத்திற்கு வருகிறார். ஜென்மத்தை விட்டுப் பாம்புக் கிரகம் விலகும்போது நல்ல பலன்களை வழங்கும் என்பது ஜோதிட நியதி. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும் கேதுவும் அந்த இடத்திலேயே சஞ்சரித்து அவை செல்லும் நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தை 'பயண ஸ்தானம்' என்றும் 'விரய ஸ்தானம்' என்றும் சொல்வது வழக்கம். எனவே இடமாற்றம் வீடு மாற்றம் ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சென்ற ராகு கேது பெயர்ச்சியில் உலுக்கி எடுத்த பிரச்சினைகள் இனி ஒவ்வொன்றாக மாறும். மனப்போராட்டம் அகல நண்பர்கள் வழிகாட்டுவர். பணப்பிரச்சினை தீரும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். வாகன யோகம் உண்டு.
6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிரிகள் உதிரிகளாவர். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். சர்ப்ப தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்து கொள்வது நல்லது.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும் 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும் காலங்களில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. வீண் விரயங்கள் உண்டு. வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் திருப்தி தராது.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும் 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும் காலங்களில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடும். மருத்துவச் செலவு பெருகும். பொதுவாழ்வில் வீண்பழி ஏற்படும். சொந்த பந்தங்களின் அரவணைப்பு குறையும்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவதால் பொருளாதாரத்தில் உச்சம் தொடுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்வீர்கள். வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்களால் லாபம் பெருகும். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளிநாட்டு அழைப்புகளை ஏற்கலாமா? என்று யோசிப்பீர்கள்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அப்போது குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6 8 10 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. எனவே எதிர்ப்பு வியாதி கடன் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். துடிப்போடு செயல்பட்டு அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமைப்படும் வகையில் அமையும். வீடு கட்டுவது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
விரய ராகுவாலும் 6-ம் இடத்து கேதுவாலும் விருப்பங்கள் நிறைவேறவும் நல்ல திருப்பங்கள் உருவாகவும் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வதோடு யோகபலம் பெற்ற நாளில் பைரவரை வழிபட்டு வாருங்கள்.