மேஷம் - ஆண்டு பலன் - 2023


மேஷம் - ஆண்டு பலன் - 2023
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:46 PM GMT)

01.01.2023 முதல் 31.12.2023 வரை

அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ,ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

தும்பிக்கையானை வழிபட்டால் நம்பிக்கை யாவும் நடைபெறும்

மேஷ ராசி நேயர்களே!

வந்து விட்டது புத்தாண்டு. வருடத் தொடக்கமே உங்களுக்கு வசந்த காலமாக அமையப்போகிறது. சனி, குரு, ராகு, கேது ஆகியவற்றின் கிரகப் பெயர்ச்சிகள் மூலம் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப்போகிறீர்கள். தானாதிபதி சுக்ரனும், தொழில் ஸ்தானாதிபதி சனியும் ஒன்றாக இணைந்து தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரித்தபடி ஆண்டு தொடங்குகிறது. எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெற இறைவழிபாடு கைகொடுக்கும். புத்தாண்டின் கிரகநிலையையும், சுய ஜாதக கிரகநிலையையும் ஆராய்ந்து, திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் ஆண்டு முழுவதும் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டு தொடக்கத்தில் ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். 9-ம் இடத்தில் சூரியன், புதன் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. தொழில் ஸ்தானத்தில் சனி பலம்பெற்று, தன -சப்தமாதிபதி சுக்ரனோடு இணைந்திருக்கிறார். விரய ஸ்தானத்தில், விரயாதிபதி குரு சொந்த வீட்டில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கிறார்.

குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால், அதன் பார்வைக்குரிய பலன் நன்மையாகவே கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு, பணிநிரந்தரம் கிடைக்கும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வழிபிறக்கும். விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் விரயங்கள் கூடும். என்றாலும் தனவரவும் வந்து கொண்டேயிருக்கும். மருத்துவச் செலவை குறைக்க, ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் சனி பகவான், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் வக்ர இயக்கத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் பொழுதும், மகர ராசியில் சஞ்சரிக்கும் பொழுதும் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்துவார். தொழில், லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி வக்ரமாக இருக்கும் போது, வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். ஆனால் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை அவசியம். சிறு உடல் உபாதை ஏற்படும்போதே மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஜென்ம குருவாக இருந்தாலும், அவர் பார்க்கும் இடங்கள் பலம்பெறும். 5-ம் இடத்தை குரு பார்ப்பதால், முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கலாம். செல்வாக்கான நிலையை அடைவீர்கள். பிள்ளைகளுக்குத் தகுந்த வேலை கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால், இதுவரை முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

7-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உடன்பிறப்புகள் பாகப்பிரிவினைக்கு ஒத்துவருவர். தந்தை வழி உறவில் நெருக்கம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வும், சலுகைகளும் கிடைக்கப்பெறும். கடன்சுமை குறையும். தீர்த்த யாத்திரை, தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார நிலை உயரும்.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். விரய ஸ்தானத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் விரயங்கள் அதிகரிக்கலாம். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் இருப்பவர்கள், ஊர் திரும்பும் வாய்ப்பும், ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும். இடமாற்றம், ஊர்மாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். மனப்போராட்டம் அகல நண்பர்கள் உதவிசெய்வர்.

6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், எதிரிகளின் தொல்லை வரலாம். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்கிய தொல்லையும், அதனால் மருத்துவச் செலவும் கூடும். செலவைக் கட்டுப்படுத்தவும், குடும்ப ஒற்றுமை கூடவும், பணியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவும், சர்ப்ப தோஷ பரிகாரங்களை யோக பாலம் பெற்ற நாளில் செய்யுங்கள்.

செவ்வாய்- சனி பார்வை

இந்த ஆண்டில் 4 முறை செவ்வாய்- சனி பார்வைக் காலம் வருகிறது. இதுபோன்ற காலங்களில் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகையால் அவதிப்பட நேரிடலாம். ராசிநாதனாக செவ்வாய் இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினை கொடிகட்டி பறக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லை வரலாம். 'வருமானத்தை சேமிக்க இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளும், அருளாளர்களின் வழிகாட்டுதலுமே இக்காலத்தை இனிமையாக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

இந்த ஆண்டு முழுவதும் சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு வாருங்கள். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். முயற்சியில் குறுக்கீடுகள் வரலாம். சூடுபிடித்த வியாபாரம் மந்தநிலைக்கு மாறும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

12.9.2023 முதல் 19.12.2023 வரை, மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறும்போது, நிதானமும், பொறுமையும் தேவை. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். பெற்றோர் வழியில் பிரச்சினைகள் வரலாம். பிடிவாத குணத்தை தளர்த்திக்கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க மறுப்பர். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சகப் பணியாளருக்கு போய்ச் சேரலாம். இந்த காலகட்டத்தில் பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சியில் ஏற்படும் தளர்ச்சி நீங்கும்.

பெண்களுக்கான பலன்கள்

புதிய திருப்பங்கள் ஏற்படும், புத்தாண்டு இது. விரய குரு, ஜென்ம குருவாக மாறிய பிறகு உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கை, பூமி வாங்கும் யோகம் உண்டு. கணவன் - மனைவிக்குள் பாசம் கூடும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு, தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.


Next Story