கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை
மனதில் நல்லதையே நினைக்கும் கடக ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். எனவே தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். நம்பித் தொட்ட காரியங்களில் எல்லாம் நன்மை கிடைக்க வேண்டு மானால், பொறுமையும் நிதானமும் தேவை. அடுத்தவர்கள் பேச்சைக் கேட்பதன் மூலம் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக இருக்கும். அதேநேரம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கத்தான் செய்யும்.
இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கப் போகிறது. எனவே வளர்ச்சியில் தளர்ச்சி கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். முயற்சி கொஞ்சம் அதிகமாக இருந்தால் மகிழ்ச்சியை ஓரளவேனும் வரவழைத்துக் கொள்ள இயலும். இதற்கிடையில் செவ்வாய் மிதுனத்தில் இருந்தபடியே சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே மற்றவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் பொழுது படித்துப் பார்த்துக் கையெழுத்திடுவது நல்லது. தனக்குத் தானே எதிரி என்பது போல, உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். தொழில் வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு சகாய, விரய ஸ்தானாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். முடங்கிக் கிடந்த தொழில் ஆதாயம் தரும். இந்த நேரத்தில் கூட்டாளிகள் தொழிலைக் கைப்பற்றிக்கொள்ள நினைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இனிமை தராத இடமாற்றங்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வின் காரணமாக, ஒரு சிலர் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்று பணிபுரிய நேரிடலாம். வெளிநாட்டு வாய்ப்புகளை நம்பிச் செல்பவர்கள், அந்த வேலை நிரந்தரமானதாக இருக்குமா? என்பதை அறிந்து செல்வது நல்லது.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி சுக, லாபாதிபதி சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். இல்லத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் நடைபெறலாம். குறிப்பாக வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கை கூடும். பணியாளர்களின் பிரச்சினை படிப்படியாக குறையும். குடும்பத்தினர்களுடன் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வாய்ப்பு, நல்ல நிறுவனங்களில் இருந்து வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரலாம். உங்களை விட்டு விலகி இருந்த உறவினர்கள், தானாக வந்து சேர்வார்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். தொழில் முனைவோர், தொல்லை தரும் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவா்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வந்தாலும், அதனை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம்தான். மாணவ - மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். விளையாட்டில் உள்ள ஆர்வத்தை படிப்பில் காட்டுவது நல்லது. கருத்து வேறுபாடு அகல, கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ளலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்:- மார்ச்: 22, 23, 26, 27, ஏப்ரல்: 2, 3, 4, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.