கடகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


கடகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:17 PM IST (Updated: 17 May 2022 1:19 PM IST)
t-max-icont-min-icon

(புனர்பூசம், 4-ம் பாதம், புனா்பூசம், ஆயில்யம் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்

பத்தில் வருகிறது ராகு; முத்தான தொழில் இனி அமையும் கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அது தொழில் ஸ்தானம் என்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதே நேரம் கேது பகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஒன்றரை ஆண்டு காலம் இந்த இடத்தில் இருந்தபடியே, ராகு-கேது இருவரும் நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

10-ம் இடத்தில் ராகு, 4-ம் இடத்தில் கேது

தொழில் ஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்தில் ராகு பகவான் வரும்பொழுது, செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். வேகமும், விவேகமும் கலந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு உத்தியோக உயர்வும் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது நல்லதில்லை. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். திடீர் திடீரென விரயங்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். தொழிலில் எதிரிகளின் தொல்லை அதிகரித்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பணப்பற்றாக்குறை ஏற்படலாம். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். இனத்தார் பகை மாறும். எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதோடு கொள்கைப் பிடிப்போடும் செயல்படுவீர்கள். அடுத்தடுத்து பல நல்ல காரியங்கள் நடைபெறும். அதிகார வர்க்கத்தின் ஆதரவும் உண்டு. 'கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்தான்' என்று இந்த உலகத்தில் உள்ளவர்கள் சொல்வார்கள்.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் மன நிம்மதி குறைவாகவே இருக்கும். உற்றார், உறவினர்களின் பகையை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் பங்குதாரர்கள் தங்களுக்குரிய பங்குகளை பிரித்துத் தரச் சொல்லி அச்சுறுத்துவர். பிள்ளைகள் வழியிலும் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகலாம். அவர்களை நெறிப்படுத்துவதும், அக்கறைப்படுத்துவதும் நல்லது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதப்படலாம். இதுபோன்ற காலங்களில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்து மேற்கொள்வது நல்லது.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, ஆரோக்கியம் பற்றிய பயம் அதிகரிக்கும். அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விரயங்கள் உருவாகலாம். தொழிலில் பழைய பங்குதாரர் களை விலக்கிவிட்டுப் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்ளும் சூழ்நிலை உண்டு. குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால் சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரப்போகிறது.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். 'நேர்முகத் தேர்விற்கு சென்றும், இதுவரை வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வெற்றிக்குரிய தகவல்கள் தொழில் ரீதியாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதில் இருந்து விடுபட்டு, சுயதொழில் செய்யலாமா? என்று சிந்திப்பர். அதற்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். தொழிலில் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். அரசியல்வாதிகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வது நல்லது. 'வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா?' என்று சிந்திப்பீர்கள். வழக்குகள் சாதகமாக முடிந்தாலும் திருப்தி ஏற்படாது. பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்பட்டு மன நிம்மதியைக் குறைக்கும்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்தி தரும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு ஆதாயம் தரும் தகவல்களைச் சொல்வார்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பால் சில நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை பரிசீலனையில் இருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்போது கிடைக்கப்பெறலாம்.

குருப்பெயர்ச்சிக் காலம்

இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு செல்லும் குருவின் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தடைகள் அனைத்தும் விலகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். 22.4.2023 அன்று மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். இதனால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி அடியெடுத்து வைப்பதால், 'அஷ்டமத்துச் சனி'யின் ஆதிக்கம் தொடங்குகிறது. மிகுந்த கவனம் தேவைப்படும் நேரம் இது. பொருளாதாரப் பற்றாக்குறை, புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உற்றார், உறவினர்கள் பகையாக மாறும் வாய்ப்பு உண்டு. சனி பகவானுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமே எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு - கேது பெயர்ச்சியின் விளைவாக நிறைய மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். தொடக்கத்தில் உங்களுக்கு கண்டகச் சனி, சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வலுவடைகிறது. எனவே விரயங்கள் இருமடங்காகும். வீடுமாற்றங்களும், இடமாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பத்தக்கதாக அமையாது. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுங்கள்.


Next Story