கடகம் - ஆண்டு பலன் - 2022


கடகம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:43 PM IST (Updated: 23 May 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

கண்டகச் சனி நடப்பதால் கவனம் தேவை

கடக ராசி நேயர்களே!

நிதானத்தோடு செயல்படுவதன் மூலமே பிறக்கும் புத்தாண்டில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். கண்டகச் சனியின் ஆதிக்கமும், அஷ்டமத்து குருவின் ஆதிக்கமும் இருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள், வீண் விரயங்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவதோடு, விருப்பங்கள் நிறைவேறி நல்ல திருப்பங்கள் உருவாக யோக பலம் பெற்ற நாளில் வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், செவ்வாயோடு இணைந்து 'சந்திர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே இல்லத்தில் மங்கல ஓசை கேட்கக்கூடிய வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். சில சொத்துக்களை விற்பதன் மூலம் கைகளில் பணம் புரளும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை, பாதிக்கு மேல் குறையும்.

11-ல் ராகு, 5-ல் கேது இருப்பதால் பாகப்பிரிவினை முடிவதில் தாமதங்கள் உருவாகும். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாத சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகலாம். சனியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் 'செய்வோமா? வேண்டாமா?' என்ற சிந்தனை மேலோங்கும்.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும். 'பூர்வீக இடத்தைக் கொடுத்துவிட்டு, புதிய இடம் வாங்கி வீடு கட்டலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். பயணங்கள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு வெளிமாநிலம் சென்று பணிபுரியும் சூழல் உருவாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. என்றைக்கோ மிகக் குறைந்த விலையில் வாங்கிப் போட்ட இடம், இப்போது பலமடங்கு விலை உயர்ந்து லாபத்தைத் தரலாம். தா்ம காரியங்களுக்கு உதவுவீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு - கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதனால் 10-ம் இடத்தில் ராகுவும், 4-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். எனவே தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு, நிலம், தோட்டம் போன்றவற்றை வாங்கிப் பராமரிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வழி உதவிகளும், அருகில் இருப்பவர்களின் உதவிகளும் கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு சொந்தவீடாகும். மீனத்தில் இருந்தபடி உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். விவாகப் பேச்சுக்கள் சுமுகமாக முடியும். பிரிந்தவர்கள் இணைவர். பிரச்சினைகள் படிப்படியாய் தீரும். நிரந்தரப் பணி ஒருசிலருக்கு கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. குடும்ப ஒற்றுமை குறையும். எதிரிகளின் பலம் மேலோங்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளமாட்டாா்கள். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளால் சிக்கல்கள் வரலாம். இதனால் மனக்கவலை உருவாகும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியான குரு, வக்ரம் பெறுவது நன்மைதான். அதே நேரம் 9-ம் இடத்திற்கும் அவர் அதிபதியாக இருப்பதால், பெற்றோர் வழியில் பிரச்சினைகள் ஏற்படும். பங்காளிப் பகை உருவாகும். அண்ணன், தம்பிகளின் அரவணைப்பு குறையலாம். சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். வழக்குகளில் சாதக நிலை ஏற்படாது.

வளர்ச்சி தரும் வழிபாடு

மாதந்தோறும் பவுர்ணமி நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டில் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. உடன் இருப்பவர்களும், உறவினர்களும் பகையாக மாறலாம். கணவன் -மனைவி இருவரும், ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுங்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினைகள் உருவாகும். வாங்கிய விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடலாம். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. இக்காலத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். இதுவரை உங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள், கூடிக்குலாவுவர். தடைகள் அதிகரிக்கும். தனவரவு திருப்தி தராது. பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது மிகமிக கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் உருவாகலாம். பயணங்களால் விரயம் உண்டு. உறவினர் பகையால் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.


Next Story