மகரம் - தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு


மகரம் -  தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:46 PM GMT)

14.4.2023 முதல் 13.4.2024 வரை

(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

தடைகள் அகன்றோடும்!

கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் மகர ராசி நேயர்களே!

வளர்ச்சியிலேயே குறிக்கோளாக இருக்கும் உங்களுக்கு இந்த சோபகிருது புத்தாண்டு நல்ல பலன்களையே அள்ளி வழங்கப் போகின்றது. ஏழரைச் சனியில், ஜென்மச்சனி விலகி குடும்பச் சனியின் ஆதிக்கத்தோடு கிரக நிலைகள் அமைந்துள்ளதால் இதுவரை ஏற்பட்ட தடைகள் அகன்றோடும். தக்க விதத்தில் பொருளாதார நிலையும் உயரும்.

ஏப்ரல் 22-ந் தேதி குரு பகவான் மேஷ ராசிக்குச் செல்கின்றார். அர்த்தாஷ்டம குருவாக இருந்தாலும் அதன் பார்வை பலத்தால் நல்ல காரியங்கள் நடைபெறும்.

புத்தாண்டில் மூன்று முறை சனி, செவ்வாயின் பார்வை ஏற்படுகின்றது. அந்த நேரங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கிறார்கள். பாக்கிய ஸ்தானத்திற்கு கேது வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிக்கு அனுமதி கிடைக்கும். 3-ல் ராகு முயற்சிகளில் வெற்றி தரலாம்.

உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்திகள் நடைபெற்றால் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடைபெறும். திசாபுத்தி பலம் இழந்திருந்தால் செய்யும் காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். அப்படிப்பட்ட சூழல் உருவாகும் பொழுது சுய ஜாதக அடிப்படையில் பரிகாரம் மற்றும் வழிபாடுகளைச் செய்தால் பலன் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி!

சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவரது பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சிக்கல்களும், சிரமங்களும் குறையும். மக்கள் போற்றும் விதம் மகத்தான வாழ்க்கை அமையும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் சூழல் உண்டு.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். அதன் விளைவாக ஒப்பற்ற புதிய தொழில் ஒன்றையும் தொடங்க முன்வருவீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு கூடுதல் லாபம் தர முயற்சிப்பர். பொது வாழ்விலும், உத்தியோகத்திலும் எதிர்பார்த்த பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.

குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். அந்நிய தேச அழைப்புகள் வந்து மகிழ்விக்கும். மண் வாங்கலாமா?, மனை வாங்கலாமா?, இல்லை பொன், பொருள் வாங்கலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, வீடு கட்டிக் குடியேறும் யோகம் முதல் நாடு விட்டு நாடு செல்லும் யோகம் வரை வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

கும்பச் சனி!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். 'இரண்டில் சனி வந்தால் திரண்ட செல்வம் வரும்' என்பர். எனவே பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். சிக்கல்களும், சிரமங்களும் விலகி இனித் தக்க பலன் கிடைக்கும். மக்கள் செல்வங்கள் மண மாலை சூட வழிபிறக்கும். பணி ஓய்விற்குப் பிறகும் கூட ஒருசிலருக்கு பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். சனி பகவான் வழிபாட்டின் மூலம் நற்பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரமும் பெறுகின்றார். பின்னர் 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் வக்ரம் பெற்று வருகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். இந்த வக்ர காலங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். குடும்ப பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். சோம்பலின் காரணமாக பல நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டுவிடுவீர்கள். ஒவ்வொரு நாளும் போவது ஒரு யுகமாக இருக்கும். மகரச் சனியின் ஆதிக்க காலத்தில் மீண்டும் ஜென்மச் சனியாக மாறு வதால் திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லலாம்.

ராகு-கேது பெயர்ச்சி!

8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 3-ம் இடத்து ராகுவால் முக்கிய திருப்பங்கள் ஏற்படும். முட்டுக்கட்டைகள் அகலும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வந்து நல்ல காரியம் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பர். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை இப்பொழுது படிப்படியாகக் குறையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை உயர்மட்ட அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

9-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. தந்தை வழிச் சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். தர்மகாரியங்களுக்குச் சிந்தை மகிழச் செலவிடுவீர்கள். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு மட்டு மல்லாமல் சிறப்பு ஸ்தலங்களுக்கும் சென்று சேவித்து வருவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நேரமிது. உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்துமுடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்பும், இனிய நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.

வளர்ச்சி தரும் வழிபாடு!

புத்தாண்டில் சீரும், சிறப்பும் வாய்க்க, செல்வ வளம் பெற அனுமன் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது. யோகலபம் பெற்ற நாளில் நல்லது நடக்க நாமக்கல் ஆஞ்சநேயரையும், தாயாரையும், நரசிம்மப் பெருமானையும் வழிபட்டு வாருங்கள்.

பெண்களுக்கான பலன்கள்!

இந்தப் புத்தாண்டின் தொடக்கமே குடும்பச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் ெவளிநாடு சென்று படிக்க விரும்பும் முயற்சிக்கும், வேலை பார்க்கும் முயற்சிக்கும் பக்கபலமாக இருப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் கிடைக்கும். இடம் வாங்கி மனை கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறப் போகின்றது. தாய் வழி ஆதரவும் தக்க விதத்தில் உண்டு. சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரித்தாலும், தெய்வ வழிபாடுகளால் திருப்தி ஏற்படும்.

குரு-சனியின் வக்ரம்!

12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் விரய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவதால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். 'சில காரியங்களைச் செய்யப் பணம் தேவைப்படுகின்றதே' என்று நினைத்த நேரத்தில் பணம் கைக்கு வந்து சேரும். காரியத்தை தொடங்கி விட்டால் உதவி கிடைக்கும் சூழல் உண்டு. பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியலாம். ஆன்றோர், சான்றோர்களின் அறிவுரைகள் அவ்வப்போது கைகொடுக்கும். பரம்பரைத் தொழிலில் புதுமைகளைப் புகுத்தி அதை மீண்டும் தொடர நினைப்பீர்கள். தளர்ச்சி இல்லாத உழைப்பின் காரணமாக தனவரவு வந்தாலும், சேமிக்க இயலாமல் விரயமே அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வுடன் கூடிய மாற்றங்கள் வரலாம்.

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். தொற்று நோய் உபாதைகள் உருவாகலாம். தொடர் கடன் சுமை கூடும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். வளர்ச்சிக்கு குறுக்கீடாகச் சிலர் வருவர். பிரபலஸ்தர்களின் மூலம் சில பிரச்சினைகள் தலைதூக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் மனக்கவலைக்கு ஆளாக நேரிடும்.


Next Story