மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 15 May 2022 6:10 PM IST (Updated: 15 May 2022 6:23 PM IST)
t-max-icont-min-icon

மூன்றில் வந்தது குருபகவான்; முயற்சியில் தளர்ச்சி அதிகரிக்கும்

பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைக்கும் மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.4.2022 முதல் 3-ம் இடத்திற்கு செல்கிறார். 3-ம் இடம் என்பது முன்னேற்றத்தைக் குறிக்கும் 'வெற்றிகள் ஸ்தானம்' ஆகும். தன் சொந்த வீடான மீனத்தில் குரு சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றாலும், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனியின் 3-ம் பார்வை குருவின் மீது பதிகின்றது.

குரு இருக்கும் இடத்தின் பலன்

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். மூன்றாமிடம் சகோதர, சகாய ஸ்தானமாகும். 12-ம் இடம் என்பது விரயங்கள், கடன்தீர்த்தல், மனப்போராட்டம், வாக்கு வாதங்கள், நித்திரை, சுகம், வெளிநாட்டு முயற்சி, பாதநோய், அயனசயனம், தெய்வத்திருப்பணிகள் போன்றவற்றைக் குறிக்கும் இடமாகும். அந்த இடங்களெல்லாம் இப்பொழுது புனிதமடைந்து நன்மைகளை வழங்கும். நேர்மறை சொற்களை அதிகம் உபயோகித்தால் நிச்சயம் நன்மைகள் கிடைக்கும்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குருபகவான், உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். அதன் பார்வை பலனால் நல்ல மாற்றங்கள் வரப்போகிறது. குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், கல்யாண முயற்சிகள் கைகூடும். கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த தம்பதியர்களுக்குள் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் படிப்படியாக அகலும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பூர்வீக சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவும் ஏதேனும் முயற்சிகள் எடுத்தால் அது நடைபெறும்.

குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே போதுமான அளவிற்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வழிகாட்டுவார். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். நிச்சயிக்கப் பெற்ற காரியங்களில் எந்த மாற்றமும் செய்ய மாட்டீர்கள். கடன்சுமை குறையும். கவலை என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியில் இருந்து அகலும். வங்கி சேமிப்பு வளர்ந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், தலைமைப் பொறுப்புகளும் வரலாம்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில், தனது சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஜீரணத் தொல்லைகள், உஷ்ணாதிக்க நோய்கள் உருவாகலாம். எடுக்கும் காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துவிடுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில், பெரிய தொகை சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படலாம்.

சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 2-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், சனியின் சாரத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது, நல்ல பலன்கள் உங்களுக்கு வரும். என்றாலும் ஏற்ற இறக்க நிலையே காணப்படும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படலாம். இருப்பினும் மன வலிமையால் அதைச் சமாளித்து விடுவீர்கள். இக்காலத்தில் சனீஸ்வரன் வழிபாடும், அனுமன் வழிபாடும் சங்கடங்களை அகற்றும்.

புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். ரேவதி நட்சத்திரக் காலில், புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக முயற்சிகள் கைகூடும். 'பணி நிரந்தரமாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு அது நிறைவேறும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். மனக்குழப்பம் அகன்று இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகள் வழியில் பிரச்சினைகள் உருவாகும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. வாகனப் பழுதுகளால் வாட்டம் உண்டு. சொத்துக்களால் சில பிரச்சினைகள் தலைதூக்கலாம்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குருவின் பார்வை பலத்தால் கல்யாண முயற்சி கைகூடும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலையும் கிடைக்கும், மாலையும் கிடைக்கும். ஏழரைச்சனி நடப்பதால் கொஞ்சம் பொறுமையோடு இருங்கள். வாடகை வீட்டில் குடியிருப்போர் வீடு மாற்றம் செய்ய நேரிடும்.

வளம் தரும் வழிபாடு

இந்தக் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமைய குரு வழிபாடும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும் அவசியம். யோகபலம் பெற்ற நாளில் திருவாரூர் மடப்புரம் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.


Next Story