மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 July 2022 4:35 PM GMT (Updated: 2022-07-16T22:22:12+05:30)

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்தும் மகர ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். இருப்பினும் சனி வக்ர இயக்கத்தில் உள்ளதால், வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் சேமிக்க இயலாது. வீண் விரயங்களும், சுபவிரயங்களும் மாறி மாறி வரும். புதன் 9-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் பூர்வீக சொத்து சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். பயணங்கள் பலன் தரும்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை உண்டாகும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். சகோதர, சகாய ஸ்தானாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் வக்ர இயக்கத்தில் செயல்படும்போது, சகோதரர் களால் பிரச்சினைகள் உருவாகலாம். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். குரு பகவான் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. உத்தியோகத்தில் நிரந்தரப் பணி அமையும்.

12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால் விரயாதிபதி குரு வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். பயணங்கள் பலன் தரும். வீடு மாற்றம், இடமாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். ஜென்மச் சனி வக்ரம் பெற்றுள்ளதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுப்பர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை செய்யுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 17, 18, 21, 22, ஆகஸ்டு: 2, 3, 6, 7, 8, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் சனியின் வக்ரத்தாலும், சுக ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. குடும்பச்சுமை கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பெரும் முயற்சி எடுக்கும் சூழல் உருவாகும்.


Next Story