மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:46 PM GMT)

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

சமயம் பார்த்து செயல்களைச் செய்து இமயமாக உயரும் மகர ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி ராசியிலேயே வீற்றிருக்கிறார். 6-ம் இடத்தில் உள்ள செவ்வாய் வக்ரம் பெற்றுச் சனியைப் பார்க்கிறார். எனவே மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய நேரம் இது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும் முயற்சியில் குறுக்கீடுகளும், முன்னேற்றத்தில் தடைகளும் வரலாம். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான், வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. ஏழரைச் சனியில் நடுப்பகுதி இப்பொழுது நடைபெறுவதால் எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். மருத்துவச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். வரவு செலவுகளில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. இல்லையேல் ஏமாற்றங் களைச் சந்திப்பீர்கள். உறவினர்கள் உங்கள் கருத்துக்களை ஏற்க மறுப்பர்.

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் இம்மாதம் வக்ர நிவர்த்தியாகி சகாய ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்கிறார். விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால் இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் விரும்பத்தகாத விதத்தில் வரலாம். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகும் சூழ்நிலை உண்டு. குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதன் மூலம் முன்னேற்றப் பாதையில் சறுக்கல்கள் ஏற்படும். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்து கொள்ளமாட்டார்கள்.

தனுசு - புதன் சஞ்சாரம்

கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விபரீத ராஜயோக அடிப்படையில் நல்ல மாற்றங்களும் வரலாம். குறிப்பாக உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சலுகைகள் கிடைத்து சந்தோஷமடைவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்பட்டாலும் மனதிற்கு பிடித்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி, ரிஷப ராசிக்குச் செவ்வாய் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானம் வரும் பொழுது தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சொத்துக்களாலும், சொந்தங்களாலும் பிரச்சினைகள் ஏற்படும்.

வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை நம்பி எதுவும் செய்ய இயலாது.

தனுசு - சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், 12-ம் இடத்தில் மறைவது அவ்வளவு நல்லதல்ல. பூர்வ புண்ணியத்தின் வலிமை குறையும். எனவே சொத்துக்களாலும், சொந்தங்களாலும் பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகளின் குணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபடுவதன் மூலம் சந்தோஷங்களை அதிகம் சந்திக்கலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 23, 24, 25, டிசம்பர்: 1, 2, 5, 6.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் வலுவடைகின்றது. மேலும் சுக ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரம் பெறுகிறார். எனவே உடல் நலத்தில் கோளாறு, உள்ளத்தில் அமைதியின்மை, கடன்சுமை, காரியங்களை ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை போன்றவை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதால் ஒற்றுமை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரிபவர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. பணப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.


Next Story