மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 2022-12-16T00:15:22+05:30)

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லும் மகர ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. சுகாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்க வழிபாடுகள் தேவை.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். 6-க்கு அதிபதி 12-ம் இடத்தில் வக்ரம் பெறுவது நன்மைதான். விபரீத ராஜயோக அடிப்படையில் திடீர் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்பால் இதயத்தில் மகிழ்ச்சி கூடும். அதே நேரத்தில் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் புதன் விளங்குவதால் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் சில பிரச்சினை தலைதூக்கும். சொத்துத் தகராறுகளால் சொந்தங்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலக நேரிடும்.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். படித்து முடித்த பிள்ளைகளின் வேலைக்காகச் செய்த முயற்சி கைகூடும்.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர் பகை அகலும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். 'வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படுகின்றதே, புதிய வாகனம் வாங்கலாமா?' என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாவது மிகுந்த யோகம்தான். வருமானப் பற்றாக்குறை அகலும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் மும்முரம் காட்டுவீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் வந்து சேரலாம். தடைப்பட்ட காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

லாபாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கும், மேல் முதலீடு செய்ய நினைத்தவர்களுக்கும், வங்கிகளின் உதவி கிடைக்கும். தங்கு, தடைகள் அகலும். இந்த நேரத்தில் சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும்.

இம்மாதம் தினந்தோறும் கணபதி வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 21, 22, 28, 29, ஜனவரி: 1, 2, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கமும், விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் சஞ்சாரமும் இருப்பதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். அதே நேரத்தில் செலவு நடைகளும் அதிகரிக்கும். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் இனிமை தரும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பது நல்லது. கட்டிடப் பணி பாதியிலேயே நிற்கலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு.


Next Story