மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

பொறுமையோடு செயல்பட்டு பெருமையைக் குவிக்கும் மகர ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் இருக்கிறார். 4-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் அடிக்கடி ஆரோக்கியத்தில் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதும், அலைச்சலைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். காரணம் ஏழரைச் சனி நடைபெறுகிறதல்லவா? எனவே எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள். தினந்தோறும் ஒரு பிரச்சினையை சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். என்றாலும் தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும்.

ராகு-கேது சஞ்சாரம்

பின்னோக்கி நகர்ந்து செல்லும் கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 10-ம் இடத்தில் கேது சஞ்சரிக்கிறார். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்துக்கள் இப்பொழுது பலமடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி மகிழ்விக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு மூலதனம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பிறரைச் சார்ந்து இருப்பவர்கள் தனித்து இயங்க முற்படுவர். அதற்கு உறுதுணையாக நண்பர்கள் இருப்பர்.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம்பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதால் குடும்பத்தில் மணிவிழா, மணவிழா போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். வெளிநாட்டு வணிகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் வரலாம். தொழில் வெற்றி நடைபோடும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும்.

ரிஷப புதன்

வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பஞ்சம ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். கண்ணியம் மிக்க நண்பர் ஒருவர் நீங்கள் எண்ணிய காரியத்தை எளிதில் முடித்துக் கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்பான பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களோடு பணிகளை செய்து முடிப்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரித்து மதிப்பெண் கூடுதலாகப் பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சுபநிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 18, 19, 29, 30, ஜூன்: 3, 4, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.


Next Story