மகரம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


மகரம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:29 PM IST (Updated: 17 May 2022 1:33 PM IST)
t-max-icont-min-icon

(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்

நான்கில் வருகிறது ராகு; உடல்நலத்தில் கவனம் தேவை மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு வரப்போகிறார். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை அமையும். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு வரப்போகிறார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் ராகு-கேது இருவரும் இந்த இடங்களில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கேற்ப பலன்களை உங்களுக்கு வழங்கப் போகிறார்கள்.

சுக ஸ்தானத்தில் ராகு, தொழில் ஸ்தானத்தில் கேது

இந்த ராகு-கேது பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு வருகிறார் ராகு. இது சுக ஸ்தானமாகும். 'அர்த்தாஷ்டம ராகு'வாக வருவதால், சுக ஸ்தானத்தில் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி தலைதூக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் பங்குதாரர்கள் விலக நேரிடலாம். புதிய பங்குதாரர்களை ஆராய்ந்து சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாழ்வில் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம் (21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவை. அளவுக்கு அதிகமான விரயங்கள் ஏற்படலாம். இழப்புகள் அதிகம் ஏற்படும். எதையும் நிதானித்துச் செய்ய இயலாது. உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. ஊா் மாற்றங்கள், இடமாற்றங்கள் இனிமை தருவதாக அமையாது. பகைவர்களின் ஆதிக்கம் மேலோங்கி பல பணிகளைச் செய்ய இயலாமல் போகலாம். இக்காலத்தில் சர்ப்ப ப்ரீதிகளைச் செய்து கொள்வது நல்லது.

சுக்ரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, ஓரளவு நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும். குடும்ப ஒற்றுமை திருப்தி தரும். பிள்ளைகளின் திருமணம் போன்ற காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த தகராறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். அசையாச் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நல்ல காரியங்கள் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பர்.

கேதுவின் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது, தொழில் முன்னேற்றம் உண்டு. படித்து முடித்து வேலை கிடைக்காத பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். செல்வாக்கு மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக நடைபெறும். எடுத்த முயற்சி பலன் தரும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அண்ணன், தம்பிகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். முன்னோர் செய்த தர்ம காரியங்களை முறையாகச் செய்ய முன்வருவீர்கள்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, இட விற்பனையால் தன லாபம் கிடைக்கும். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். பயணங்கள் பலன் தரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கலாம். நிச்சயிக்கப்பட்ட ஒரு சில காரியங்கள் நல்லவிதமாக நடந்தேறும்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். 'வியாபாரத்தில் முதலீடு செய்ய பணம் வேண்டுமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது பணம் கைக்கு கிடைக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் வந்திணையும். பாதியில் நின்ற கட்டுமானப் பணி மீதியும் தொடரும். ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டில் வசிக்கும் சொந்தங்களால் ஆதாயம் உண்டு. நாகரிகப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

குருப்பெயர்ச்சிக் காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு செல்லும் குரு, அங்கிருந்து உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் கல்யாண வாய்ப்பு கைகூடும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தந்தை வழி ஆதரவு உண்டு. அடுத்ததாக 22.4.2023 அன்று மேஷத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். அப்போது குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு. கடன் சுமை பாதிக்கு மேல் குறையும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் அப்போது நடைபெறும். எனவே குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்களை நம்பி செய்த காரியங்கள் நல்லவிதமாக முடியும். உத்தியோகத்தில் இதுவரை வராத பதவி உயர்வு இப்பொழுது வந்து சேரும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், முக்கியப் புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படும். அர்த்தாஷ்டம ராகு என்பதால் எதையும் சிந்தித்துச் செய்வது உத்தமம். கணவன் - மனைவிக்குள் பிணக்கு ஏற்படாமல் இருக்க, ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுங்கள். பிள்ளைகளால் பிரச்சினைகள் வரலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இல்லத்து பூஜையறையில் சனி கவசம் பாடி வழிபடுவதுடன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதும் நல்லது.


Next Story