மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மிதுன ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியான செவ்வாய், 10-ல் சஞ்சரிக்கும் பொழுது தொழில் பிரச்சினை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நிம்மதி குறையும். வாய்தாக்கள், வழக்குகள் வந்த வண்ணம் இருக்கும். மனக்குழப்பம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை அதிகரிக்கும். சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப்போகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் மற்றும் சனி -செவ்வாய் பார்வை ஏற்படுவதால் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படலாம். குருவோடு செவ்வாய் இணைந்து 'குருமங்கள யோக'த்தை உருவாக்குவதால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தனவரவு திருப்தி தரும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இந்த நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடிவரும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். விரயாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்போது, விரயத்திற்கேற்ற வருமானம் வந்துசேரும். இருப்பினும் வீண் விரயம் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். வருமானம் இருந்தாலும் செலவு இரட்டிப்பாகும். பெற்றோர் வழி உறவில் விரிசல் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி தடைப்படும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
இம்மாதம் புதன்கிழமை தோறும் விரதமிருந்து விஷ்ணு மற்றும் லட்சுமியை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 23, 24, 27, 28, ஜூன்: 3, 4, 8, 9, 10மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும், 10-ம் இடத்து குருவின் ஆதிக்கமும் உள்ளதால் பதவி மாற்றம் வரலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். நீண்ட நாள் நோய் அகன்றாலும், உடல்நலனில் சில கோளாறுகள் வரத்தான் செய்யும். பொருளாதாரப் பற்றாக்குறை உண்டு. பணி புரியும் பெண்களுக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செலவிடுவீர்கள். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகமும், ஒரு சிலருக்கு வாய்க்கும்.