மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை
மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்று விரும்பும் மிதுன ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். சகாய ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடந்தாலும், விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய மாதம் இது.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த வேளையில், எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் குறுக்கீடு ஏற்படும். சஞ்சலம், சந்தேகம் காரணமாக, பல காரியங்களை செயல்படுத்த இயலாமல் போகலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வீண்பழிகள் ஏற்படலாம்.
மிதுன - புதன் சஞ்சாரம்
ஆனி 11-ந் தேதி, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கே வருகிறார். இதன் விளைவாக நல்ல பலன்கள் ஏற்படும். குறிப்பாக தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்தி வீடு வந்துசேரும். புதன் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உயர்அதிகாரிகளின் பழக்கத்தால் உத்தியோகத்தில் சில காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.
மேஷ - செவ்வாய் சஞ்சாரம்
ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். லாப ஸ்தானாதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்திற்கே வரும்பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பூமி வாங்கும் யோகம் வாய்க்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல்கள் கிடைக்கலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
கடக - புதன் சஞ்சாரம்
ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதனான புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் இப்பொழுது துரிதமாகும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மிதுன - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 29-ந் தேதி, மிதுன ராசியான உங்கள் ராசிக்கு பஞ்சம, விரயாதிபதியான சுக்ரன் வருகிறார். எனவே பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். பின்னணியாக இருக்கும் சில உறவினர்களுக்கும் நீங்கள் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் வீடு, வாகனம் வாங்க சலுகைகள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும்.
இம்மாதம் லட்சுமி சமேத விஷ்ணுவை வழிபட்டு வருவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 30, ஜூலை 1, 6, 7, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாது. கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.