மிதுனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
8.10.2023 முதல் 25.4.2025 வரை
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் 4-ம் இடத்திற்கு வருகிறார். ஒன்றரை ஆண்டுகாலம் இந்த இடத்தில் இருந்தபடியே ராகு-கேது இருவரும் நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகும் ராகுவால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்த தடைகள் அகலும். கொடுக்கல்- வாங்கல் சுமுகமாகும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து ஆச்சரியப்பட வைக்கும். 'வேலைக்கு செல்வதா? அல்லது தொழில் செய்வதா?' என்று குழம்பியவர்களுக்கு தெளிவு பிறக்கும். 'செய்யும் தொழிலை விரிவு செய்ய, போதுமான மூலதனம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு உருவாகும். ஒரு சிலருக்கு தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கப்பெறும்.
சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்ஏற்படும். தகுந்த ஓய்வு, உடல்நலத்தை சீராக்கும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரையான போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரமடைவது நன்மைதான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் வியாபாரம் வெற்றி நடைபோடும். வீடு மாற்றம் நன்மை தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி அனுகூலமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் உறுதியாகலாம்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் உங்களுடைய அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே குறுக்கீடு சக்திகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. நீங்கள் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் மாற்றம் உண்டு. வரும் மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். வீடு, மனை சேர்க்கை உண்டு. கட்டிய வீட்டை பழுதுபார்க்கும் சூழல் சிலருக்கு ஏற்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நேரம் இது.
பெண்களுக்கான பலன்கள்
ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக எண்ணற்ற மாற்றங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழில் முன்னேற்றம் உண்டு. கடன் சுமை குறையும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெயரிலேயே சொத்து வாங்கும் யோகம் வாய்க்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
பத்தாமிடத்து ராகுவால் தொழில் வளம் மேலோங்கவும், நான்காம் இடத்து கேதுவால் நலங்கள் யாவும் வந்து சேரவும், திருமால் - திருமகள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.