மிதுனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்


மிதுனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 23 May 2022 3:05 PM IST (Updated: 23 May 2022 3:06 PM IST)
t-max-icont-min-icon

27-12-2020 முதல் 20-12-2023 வரை

அஷ்டமத்தில் வருகிறது சனி, அமைதிதான் தேவை இனி! மிதுன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, 8-ம் இடம் சனிக்கு ஆட்சி வீடாகவும், சொந்த வீடாகவும் இருக்கின்றது. எனவே விரயங்கள் ஏற்பட்டாலும், சுப விரயங்களே அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இயற்கையாகவே வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை கொடுத்தாலும் மீண்டும் கடன் வாங்கும் அமைப்பு உருவாகும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்

டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் மனதிற்கு ஏற்ற விதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாகனங்களாலும் தொல்லை ஏற்படும். இதை ஒரு சோதனைக் காலமாகக் கூடக் கருதலாம். இருந்தாலும் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

சனியின் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களில் அதன் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால், குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும்.

சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களாக சுய முடிவடுத்து ஏதேனும் காரியங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க நேரிடும். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய தொழிலில் அக்கறை செலுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.

சனியின் பாதசாரப் பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருந்த உடன்பிறப்புகள் விலகக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்குவதால் தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, துரித கதியில் முன்னேற்றங்கள் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். அங்ஙனம் சஞ்சரிக்கும்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மாறுகின்றது. எனவே இல்லம் தேடி இனிய பலன்கள் வரப்போகின்றது. அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைக்கப் போகின்றது.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் தடைகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றங் கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்

21.3.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்பொழுது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், வியாபார விருத்தி ஏற்படும். இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாகவே அமையும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். உறவினர் பகை மாறும். 9-ம் இடத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால் ஒருசில சமயங்களில் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் தேவைப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொண்டால் பிரச்சினைகள் ஏற்படாது. தாய் மற்றும் சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்காகவும் செலவிடுவீர்கள். சனியின் வக்ர காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.


Next Story