சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 15 May 2022 4:30 PM IST (Updated: 15 May 2022 4:36 PM IST)
t-max-icont-min-icon

எட்டில் வந்தது குருபகவான்; இனி எல்லாம் நலமாகும்

கூப்பிட்டுப் பேசுபவர்களுக்கு மத்தியில் கும்பிட்டுப் பேசும் சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.4.2022 முதல் 8-ம் இடத்திற்குச் செல்கிறார். சுமார் ஓராண்டு காலம் அங்கு வீற்றிருந்து அதன் பார்வை பலத்தால் உங்களுக்கு நன்மைகளை வழங்கப் போகிறார்.

குரு இருக்கும் இடத்தின் பலன்

நவக்கிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான், உங்கள் ராசிக்கு பஞ்சம, அஷ்டமாதிபதியாக விளங்குபவர். அவர் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில், தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். சிறுசிறு உடல் தொந்தரவுகள், மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார். அதையும் சுபவிரயங்களாக மாற்றிக் கொண்டால் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். இடமாற்றம், வீடுமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குரு பார்வையால் தன ஸ்தானம் புனிதமடைவதால் அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள்.

குருவின் பார்வை பலன்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களை, குரு பார்க்கப் போகிறார். வாக்கு, தனம், குடும்பம், தாய், வீடு, வாகனம், சுகம், பயணம், வெளிநாடு போன்ற ஆதிபத்யங்களை எல்லாம் குரு பகவான் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. 2-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அதே சமயம் விரய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் வீண் விரயம் ஆகாமல், சுபவிரயமாக மாற வழி ஏற்படுத்தும்.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் வீடு கட்டும் வாய்ப்பும், அசையாச் சொத்து வாங்கும் வாய்ப்பும் கைகூடி வரும். தாயின் உடல்நிலை சீராகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்துக்கள், இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி, அதன் மூலம் ஒரு பெரும் தொகை கிடைக்கலாம்.

12-ம் இடத்தைக் குரு பார்ப்பதால், சுபச் செய்திகள் வந்தபடி இருக்கும். மங்கல ஓசை மனையில் கேட்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீண்டதூரப் பயணங்கள் உறுதியாகும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள் சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு பஞ்சம, அஷ்டமாதிபதியானவர் குரு. அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில் தன்னுடைய சுய சாரத்தில் சஞ்சாரம் செய்யும்பொழுது, நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் போட்டிகள் அகலும். வியாபார விருத்தியை முன்னிட்டுப் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள்.

சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)

உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அஷ்டமாதிபதியான குரு, உத்திரட்டாதி நட்சத்திரக் காலில் 6-க்கு அதிபதியான சனியின் சாரத்தில் சஞ்சரிக்கும் போது, விபரீத ராஜயோக அடிப்படையில் நல்ல பலன்கள் உங்கள் இல்லம் தேடிவரப்போகிறது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கி அதில் இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் பூர்த்தியாகும். இரும்பு, இயந்திர வியாபாரம் செய்பவர்களுக்கும் இது ஒரு பொற்காலமாக அமையும்.

புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)

உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ரேவதி நட்சத்திரக் காலில் புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் உண்டாகும். குறிப்பாக மிதமிஞ்சிய பொருளாதாரமும், தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்கு லாபமும் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)

உங்கள் ராசிக்கு பஞ்சம, அஷ்டமாதிபதியாக விளங்குபவர், குரு பகவான். எனவே அவரது வக்ர காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடக்கும். இருப்பினும் நன்மைகளே அதிகம் நடைபெறும் என்று நம்பலாம். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க சீர்வரிசைப் பொருட்களை வாங்கலாம்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தக் குருப்பெயர்ச்சி நன்மை தரும் விதம்அமையும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்குறை அகன்று மகிழ்ச்சி தரும். திருமண வயதடைந்த பிள்ளைகளுக்கு கல்யாணக் கடமைகளை முடிப்பீர்கள். உங்கள் பெயரிலேயே புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும்.

வளம் தரும் வழிபாடு

இல்லத்து பூஜையறையில் தினமும் சிவபுராணம் பாடி சிவனையும், உமையவளையும் வழிபடுவது நல்லது, சிறப்பு வழிபாடாக ஆலங்குடி குருபகவான் வழிபாடும், தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் வழிபாட்டையும் யோகபலம் பெற்ற நாளில் செய்து வந்தால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.


Next Story