சிம்மம் - ஆண்டு பலன் - 2022


சிம்மம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 14 May 2022 10:19 PM GMT (Updated: 14 May 2022 10:42 PM GMT)

(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள்:- ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்

சுபவிரயங்கள் அதிகரிக்கும்

சிம்ம ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் 6-ல் சனியும், 8-ல் குருவும் தன் சொந்த வீட்டில் இருக்கிறார்கள். எனவே வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகிவிடும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் நல்ல விதமாக முடிவடைந்துவிடும். அஷ்டமத்தில் குரு இருப்பதால் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளலாம்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டு தொடங்கும் பொழுது உங்கள் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்று, தன - லாபாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். என்றாலும் சூரியனோடு ராகு இருப்பதால் மன நிம்மதி குறையும். ராகு - கேதுக்களின் இடையில் கிரகங்கள் சிக்கியிருக்கின்றன. அதுவும் ராசிநாதனோடு ராகு இருப்பதால் சர்ப்பக் கிரக வழிபாடுகளை முறையாக செய்தால் ஏற்ற இறக்கமில்லாத வாழ்க்கை அமையும்.

பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் சூரியன் - ராகு சேர்க்கை இருப்பதால் கொஞ்சம் அனுசரிப்புத் தேவை. கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுங்கள். எந்தப் புது முயற்சி செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையையும், அருளாளர்களின் ஆசியையும் பெற்று செய்வது நல்லது. அரசு வழிப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சகாய ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள். பழைய வழக்குகள் மீண்டும் தலைதூக்கலாம். இருந்தாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.

6-ல் சனி இருப்பதால் 'விபரீத ராஜ யோக' அடிப்படையில், திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டுச் செய்தால் அந்த காரியம் நிறைவேறாது. இந்த காலகட்டத்தில் நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பதை எண்ணி கவலைகொள்வீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். வேலை மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொழில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் என்று மன உளைச்சல் இருந்துகொண்டே இருக்கும். கடன் பிரச்சினையும் தொடர்ந்து வரும். சுய ஜாதகத்தை ஆராய்ந்து தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

வருடத் தொடக்கத்தில் செவ்வாயை, சந்திரன் பார்ப்பதால் 'சந்திர மங்கள யோகம்' ஏற்படுகிறது. சுக்ரனோடு செவ்வாய் இணைந்திருப்பதால் 'சுக்ர மங்கள யோகமும்', புதனோடு சூரியன் இணைந்து 'புத ஆதித்ய யோக'மும் செயல்படுகிறது. குரு மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றன. குருவிற்கு 6-ம் இடத்தில் இருந்து 'சகட யோக'த்தை சந்திரன் உருவாக்குகிறார். இத்தனை விதமான யோகங்களோடு இந்த ஆண்டு பிறப்பதால், புதிய வாழ்க்கை மலரப் போகிறது.

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சுக்ரனோடு செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால், இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். அசையாச் சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாகப் பூமி யோகம் செயல்படும் ஆண்டு இது.

குருவின் பார்வை பலன்

ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. ஆண்டு முழுவதும் அந்த இடத்தில் குரு இருந்தாலும், அது வக்ரம் பெறும் நேரத்தில் உங்களுக்கு நற்பலன்கள் வந்துசேரும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப முன்னேற்றம் கூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குருவின் பார்வை 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தாயின் உடல்நலம் சீராகும். வாகனம், வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். பயணங்கள் பலன் தரும். தூர தேசத்தில் இருந்து நல்ல தகவல் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உள்ளம் மகிழும் விதம் இடமாற்றங்கள் பதவி உயர்வோடு கிடைக்கலாம். சுபவிரயங்கள் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். சனியின் வக்ர காலத்தில் உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் முயற்சியில் வெற்றியும், லாபமும் உண்டு. 29.3.2023-ல் கும்ப ராசிக்கு சனி செல் கிறார். அது உங்களுக்கு சப்தம ஸ்தானம் என்பதால், 'கண்டகச் சனி' செயல்படும். இதனால் வீண் விரயம் அதிகரிக்கலாம். மருத்துவச் செலவுகளும் கூடும். செய்யும் செயலில் மற்றவர்கள் குறை கண்டுபிடிப்பர். சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளைச் செய்யுங்கள்.

வளர்ச்சி தரும் வழிபாடு

பிரதோஷத்தன்று நந்திக்கான பதிகம் பாடி, நந்தியம் பெருமானையும், சிவன்- பார்வதியையும் வழிபட்டு வாருங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டின் தொடக்கம் நன்றாக அமைந்தாலும், ஏதேனும் ஒரு குறைபாடு இருந்து கொண்டேயிருக்கும். 'பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறதே' என்று கவலைப்படுவீர்கள். கணவன் - மனைவி ஒற்றுமை ஓங்கும். தாய்வழி ஆதரவு உண்டு. பிள்ளைகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வரலாம்.


Next Story