துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
22-04-2023 முதல் 01-05-2024 வரை
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
ஏழாமிடத்தில் குருபகவான், எதிர்காலம் இனி சிறப்பாகும்!
பிறரிடம் எளிதாகவும், இனிமையாகவும் பழகும் துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 முதல் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு ஓராண்டு காலம் வீற்றிருந்து அவரது பார்வை பலனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேற உறுதுணையாக இருக்கப் போகின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்றாலும் அவரது பார்வைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும். எனவே இனி தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். வெற்றி வாய்ப்புகள் படிப்படியாக வீடு தேடி வரும். மக்கள் செல்வங்களின் கல்யாணம் முதல் மகத்தான வாழ்க்கை அமைவது வரை நல்ல பலன்கள் நடைபெறும்.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
நவக்கிரகங்களில் சுபகிரகமாக கருதப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் இப்பொழுது 7-ம் இடத்திற்கு வந்திருப்பதால் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் அகலும். பற்றாக்குறை மாறிப் பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுக்கள் முடிவாகும். செல்வாக்கு மிக்கவர்களின் பழக்கத்தால் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.
ஏழினில் குருதான்வந்தால்
எதிர்காலம் சிறப்பாய் மாறும்!
வாழ்விலே வசந்தம் சேரும்!
வருமானம் திருப்தியாகும்!
சூழ்ந்திடும் பகைவிலகும்!
தொடுத்திடும் மாலை சேரும்!
கோள்களின் குருவை நீங்கள்
கும்பிட்டால் நலம் கிடைக்கும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் வருமானம் தொழிலில் கிடைக்கும். பகைவர்களாக இருந்தவர்கள் நட்பாக மாறுவர். மேலும் குருவை முறையாக வழிபடுவதன் மூலம் கூடுதல் நற்பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.
வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!
நவக்கிரகங்களில் நல்ல கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அவர் பார்வையின் மூலம் பலமடங்கு நன்மைகளை வழங்குவார். இப்பொழுது அவர் உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கப் போவதால் அற்புதமான பலன்கள் வரப்போகின்றது. உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். மூடிக்கிடந்த தொழிலுக்கு இனிய திறப்புவிழா நடத்துவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பதவிகள் தானாகத் தேடிவரலாம்.
குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. இதனால் சகோதர ஒற்றுமை பலப்படும். சுற்றமும், நட்பும் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர். இப்பொழுது பணிபுரியும் நிறுவனத்தைக் காட்டிலும் வெளிநாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே எதிர்பார்த்ததைக் காட்டிலும் தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். கூட்டு முயற்சியிலிருந்து விடுபட்டுத் தனித்து இயங்கும் வாய்ப்பு கைகூடிவரும். உத்தியோகத்தில் உயர்வு இப்பொழுது கிடைக்கும். தொழில் நடத்திவருபவர்கள் இப்பொழுது கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!
அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் வந்து சேரும். பொருளாதார நெருக்கடிகள் அகலும். தனவரவு தாராளமாக வந்து சேரும். வாங்கல்-கொடுக்கல்கள் சரளமாக இருக்கும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இரவு பகலாக பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். எதிர்ப்புகள் இடம் தெரியாமல் போகலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் உங்கள் ராசிக்கு அதிபதியான பரணி நட்சத்திரக்காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வகையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அசையாச் சொத்துக்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிக்க இயலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது யோகங்கள் வந்து கொண்டே இருக்கும். தேக ஆரோக்கியம் சீராகும். தெளிந்த மனத்தோடு செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கேட்ட இடத்திலிருந்து மூலதனம் கிடைக்கும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாகனம் வாங்கி மகிழும் நேரம் இது. பணி நீக்கம் செய்தவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும்.
ராகு-கேது பெயர்ச்சி!
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று ராகு-கேது பெயர்ச்சியும் நடைபெற இருக்கின்றது. மீன ராசிக்கு ராகு வருகின்றார். கன்னி ராசிக்கு கேது செல்கின்றார். இப்பொழுது குருவுடன் சேர்ந்த ராகு விலகி விட்டது. எனவே குரு பகவான் கூடுதல் பலம் பெறுகின்றார். அவரது பார்வைக்கும் அதிக பலன் கிடைக்கும். 6-ம் இடத்தில் ராகு வருவதால் தீராத நோய் தீர வழிபிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர். 12-ல் கேது சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிகச் சுற்றுலாக்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால் அதன் வக்ர காலம் வளர்ச்சி தரும் காலமாக அமையும். சிக்கல்களும், சிரமங்களும் மாறும். திடீர் தனவரவு உண்டு. தொழில் வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். எதிரிகள் விலகுவர். எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்து மகிழ்ச்சிக் கடலில் மிதக்க நேரிடும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும். வீடு வாங்குவது பற்றிச் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு குருவின் நேரடிப் பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடனிருப்பவர்களும், உறவினர்களும் ஆதரவு தருவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் கல்யாணத்தை மிகச்சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உங்கள் பெயரிலேயே வீடு அல்லது இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு தானாக வந்து சேரும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்துப் பூஜையறையில் வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தினம்தோறும் சிவபுராணம் பாடி சிவன்-உமையவள் வழிபாட்டை மேற்கொண்டால் செயல்களில் வெற்றி கிட்டும்.