துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

நிதானத்தோடு செயல்படும் துலாம் ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதி குரு ஆறிலும், 5-க்கு அதிபதி சனி ஐந்திலும் சஞ்சரிக்கின்றார்கள். லாபாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் கடன் சுமை படிப்படியாகக் குறையும். கவலையும் தீரும். அர்த்தாஷ்டமச் சனி விலகியதால் அடுக்கடுக்கான நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரப்போகின்றது. வளமான வாழ்வமைய நண்பர்கள் வழிகாட்டுவர். குருவின் பார்வையும் இம்மாதம் உங்கள் ராசியில் பதியப் போவதால் கூடுதல் நன்மை கிடைக்குமென்றே சொல்லலாம்.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். சனிக்கு கும்ப ராசி சொந்த வீடாகும். எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. நினைத்தது நிறைவேறும். நேசம்மிக்க உறவினர்களின் பாசமழையில் நனைவீர்கள். ஆசைப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்க, அடுக்கடுக்காக லாபம் வந்து கொண்டே இருக்கும். உங்கள் யோசனைகள் அனைத்தும் வெற்றிபெறும் நேரம் இது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நல்ல முடிவிற்கு வரும். 'வாங்கிய சொத்துக்களை வைத்துக்கொள்வதா? இல்லை கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதா?' என்று சிந்திப்பீர்கள். பண நெருக்கடி அகலும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருப்பவர்கள் தனித்து இயங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கும் குரு பகவான், கல்யாண முயற்சியைக் கைகூட வைப்பார். வருமானத்தையும் உயர்த்துவர். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அருள்தரும் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசியைக் குரு பார்ப்பதால் மனதைரியமும் அதிகரிக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணப்பிரச்சினை காரணமாக விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோக மாற்றத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடலாம். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற வழிபாடு கைகொடுக்கும்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன், 9-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். பாக்கிய ஸ்தானம் பலம்பெறுவதால் சுபநிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வதோடு பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு மற்றும் இடம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

இம்மாதம் குரு பகவான் வழிபாடு குதூகலம் வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 24, 25, 30, மே: 1, 2, 6, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.


Next Story