துலாம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்


துலாம்  - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:45 PM GMT)

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை

சாந்த குணத்தோடு பிறருக்கு உதவி செய்யும் துலாம் ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் குரு பார்க்கிறார். எனவே நினைத்தது நடக்கும். நேச மனப்பான்மை கொண்டவர்கள் பாசத்தோடு பழகுவதோடு பண வரவிற்கும் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கடல் தாண்டிச் செல்லும் யோகம் கூட ஒரு சிலருக்கு உண்டு. ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை மட்டும் அடிக்கடி வந்து அலைமோதும்.

புதன் வக்ரம்

புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். சுபவிரயங்கள் அதிகரிக்கும். தூர தேசத்திலிருந்து உங்களுக்கு ஆதரவு தருவதாக நண்பர்கள் எடுத்துரைப்பர். தொழிலைப் பொறுத்தவரை புதிய பங்குதாரர்கள் வந்திணைய வாய்ப்பு உண்டு. தொழிலுக்கான கூடுதல் முதலீடுகளைச் செய்ய, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெறும் விரயமாக மட்டுமல்லாமல் வருமானம் வந்தே உங்களுக்கு செலவு ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம் - செவ்வாய்

புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தனாதிபதி செவ்வாய் தங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்தநேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வளமான எதிர்காலத்திற்கு வழிகூறும் விதத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

துலாம் - புதன்

புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத விரயம் உண்டு. இடமாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும். பெற்றோரின் உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் தக்க வைத்துக் கொள்வது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ-மாணவிகள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தினால் மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு பொருளாதாரம் திருப்தி தரும். வாழ்க்கைப் பாதையில் இருந்த குறுக்கீடு அகலும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தானாக கைகூடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 20, 21, 22, 25, 26, அக்டோபர்: 6, 7, 11, 12, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.


Next Story