துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

8.10.2023 முதல் 25.4.2025 வரை

துலாம் ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் இடத்திற்கு கேது வருகிறார். 6-ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருப்பதால் 'அஷ்டலட்சுமி யோகம்' உருவாகின்றது.

ஆறாம் இடத்திற்கு வரும் ராகுவால், தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். கடன்சுமை குறையும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். நினைத்த தொழிலை தொடங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை வந்துசேரும். வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும்.

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பிறருக்காக எடுத்த முயற்சியில் உங்களுக் கும் ஆதாயம் கிடைக்கும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வீண் விரயம் ஏற்படாமல் தடுக்க சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள்.

குரு மற்றும் சனி வக்ர காலம்

8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் என்பதால், இந்த வக்ர காலத்தில் திருமணத் தடை அகலும். கட்டிடம் கட்டும் பணியில் இருந்த தொய்வு நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாகி, தேவையான சலுகைகளைப் பெறுவீர்கள்.

8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த சனியின் வக்ர காலத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் குறுக்கீடுகள் ஏற்படலாம். எதையும் துணிந்து செய்ய இயலாது.

சனிப்பெயர்ச்சி காலம்

20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனிபகவான் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு சனி பகவான் செல்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. எனவே செய்தொழில் எதுவாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். தடைபட்டு வந்த காரியங்கள் சிறப்பாக நடைபெறும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற பிறர் ஒத்துழைப்பு நல்குவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி காலம்

1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு குரு செல்கிறார். அவர் அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே தனவரவு திருப்தி தரும். தடைகள் அகலும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்து வாங்க முன்வருவீர்கள். ஆன்மிக பயணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை தரும் பெயர்ச்சியாகவே அமைகிறது. உடல்நலம் சீராகி, உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஆறாம் இடத்து ராகுவால் யோகங்கள் அனைத்தும் வந்து சேரவும், பன்னிரண்டாம் இடத்து கேதுவால், பயணங்களில் அதிக நற்பலன் கிடைக்கவும், இல்லத்தில் ஆஞ்ச நேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபாடு செய்யுங்கள்.


Next Story