துலாம் - ஆண்டு பலன் - 2022


துலாம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:46 PM IST (Updated: 23 May 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- ர, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

முற்பாதி வரவு, பிற்பாதி செலவு

துலாம் ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு தொடக்கம், குரு பார்வையோடு இருப்பதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தடையாக இருந்த காரியங்கள் தானாக நடைபெறும். உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு காண்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 6-ல் குரு வருவதால், கூடுதல் விரயங்கள் ஏற்படலாம். குறிப்பாக குரு பார்வை விரய ஸ்தானத்தில் பதிவதால் வருடத்தின் பிற்பாதியில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வியாழன் தோறும் குரு வழிபாட்டையும், சிறப்பு வழிபாட்டையும் மேற்கொண்டால் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், அது பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. ஆரோக்கியத் தொல்லையில் இருந்து மீள வழிபிறக்கும். வீடு கட்டுவது, அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இரண்டில் கேது, எட்டில் ராகு இருப்பதால் நிதானத்துடன் எதையும் செய்யுங்கள். நிச்சயிக்கப்பட்ட சில காரியங்களில் மாற்றம் ஏற்படும்.

பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றங்கள் சஞ்சலத்தைக் கொடுக்கும். நீண்டதூரத்திற்கு கிடைத்த மாறுதல்களால் நிம்மதி குறையும். திசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு நற்பலன்கள் நடைபெறும். வருடத் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் குரு மாறுவதற்குள் யோசித்து வைத்த நல்ல காரியங்களை முடிப்பது நல்லது.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியிலும், 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசியிலேயே கேது சஞ்சரிக்கப் போகிறார். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பார். எனவே குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். சரிவிகித ஓய்வே, உடல் நலத்தை சீராக்கும். 7-ல் ராகு சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வளர்ச்சியில் கொஞ்சம் தளர்ச்சியும் ஏற்படலாம். ஒருசில சமயங்களில் 'நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள்.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவுக்கு சொந்த வீடாகும். மீனத்தில் இருந்தபடியே, உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே, குடும்ப முன்னேற்றம் கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வௌிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே அவரது வக்ர காலத்தில் சுகக் கேடுகள் வரலாம். வாங்கிய இடத்தை விற்கக்கூடிய சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு, சங்கிலித் தொடர்போல கடன் சுமையும் ஏற்படும்.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகைக் கிரகமாகும். எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். இக்காலத்தில் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் செய்த புது முயற்சி வெற்றி தரும். எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர்.

வளா்ச்சி தரும் வழிபாடு

பிறக்கும் புத்தாண்டில் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், தெற்கு நோக்கிய சன்னிதியில் அருள்பாலிக்கும் அம்பிகையை வழிபடுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டின் தொடக்க நிலை நன்றாக உள்ளது. மீன குருவின் மாறுதலுக்குப் பிறகு எதிர்பார்ப்பு கள் நிறைவேறுவதில் எண்ணற்ற தடைகள் ஏற்படலாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தால் இடமாற்றம் ஏற்படும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. இந்த முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் செய்யும் புது முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. உறவினர்களின் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்தி சாலித்தனமாகும். வரவைவிடச் செலவுகள் அதிகரித்து மன வாட்டத்தை உருவாக்கும். கவனமாக செயல்படுங்கள்.


Next Story