மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

22-04-2023 முதல் 01-05-2024 வரை

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதிவரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

தன ஸ்தானத்தில் குருபகவான், சந்தோஷ நிகழ்ச்சிகள் அரங்கேறும்!

சமுதாயத்தில் தனக்கென ஒரு முத்திரை பதிக்கும் மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராசிநாதன் குரு பகவான், 22.4.2023 முதல் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். தன ஸ்தானமான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்துமுடிக்கும் ஆற்றல் கிடைக்கும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து வருவதோடு சுய ஜாதகத்தில் குருவின் பாதசார பலமறிந்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் உன்னதமான வாழ்க்கை அமையும்.

குரு இருக்கும் இடத்தின் பலன்!

நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர். அவர் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். நல்ல வரன்கள் வாசல்தேடி வரும். உத்தியோகம், தொழிலில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

இரண்டினில் குருவந்தால்

இல்லத்தில் மகிழ்ச்சிவரும்!

திரண்ட செல்வம்வரும்!

திருமணமும் கைகூடும்!

உறவினரின் பகைமாறும்!

உயர்பதவி வந்திணையும்!

குருவை வழிபட்டால்

கூடுதலாய் நன்மைவரும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது இரண்டாமிடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது இல்லத்தில் உள்ளவர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் வளர்ச்சியும், வசதி வாய்ப்பும் அதிகரிக்கும்.

வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான 6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் யோகம்தான். இனி எந்த எதிர்ப்புகளும் உங்களைப் பாதிக்காது. இன்னல்களை ஏற்படுத்தியவர்கள் மனம் மாறி உங்கள் காரிய வெற்றிக்கு உறுதுணைபுரிவர். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஊர் மாற்றங்கள், இட மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்அதிகாரிகள் மூலமாக சில சலுகைகள் கிடைக்கும்.

குருவின் பார்வை எட்டாமிடத்தில் பதிவதால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயின் கொடுமை இப்பொழுது தீரும். பழைய பங்குதாரர்களோடு பிரச்சினை ஏற்பட்டதன் விளைவாக அவர்களை விலக்கிவிட்டுப் புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். பணியாளர்கள் உங்களை விட்டு விலகினாலும் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொண்டு தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் என்று மாற்றங்கள் வரலாம்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில் வாய்க்கும், முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தகுதியுள்ள பணியாளர்களை சேர்த்துக் கொண்டு தனவரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி விலகுவர். வாடிக்கையாளர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். நாடாளும் நபர்களின் நட்பால் தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள்.

நட்சத்திரப்படி பாதசாரப் பலன்கள்!

அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவதில் மும்முரம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் அவற்றில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் பரணி நட்சத்திரக்காலில் சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். வாங்கிய வீட்டை விற்றுவிட்டோமே இனி மீண்டும் வீடு வாங்கும் யோகம் உண்டா என்ற மனக்கிலேசத்தோடு இருந்தவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களுடன் ஏற்பட்ட அரசல், புரசல்கள் மாறும். ஆடம்பரச் செலவைக் குறைத்துக் கொண்டு வெற்றிநடை போடுவீர்கள். தள்ளிப் போன திருமணம் தானாக நடைபெறும்.

கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது புதிய பொறுப்புகளும். பதவிகளும் ஒருசிலருக்கு வந்து சேரும். புனிதப் பயணங்கள்அதிகரிக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நேரமிது. உங்கள் ராசி அடிப்படையில் 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். எனவே அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது தீராத வியாதிகள் தீரும். உங்கள் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளும் கைகூடும்.

ராகு- கேது பெயர்ச்சி!

மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது (8.10.2023) அன்று மீன ராசியான உங்கள் ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். எனவே சர்ப்பதோஷம் உருவாகின்றது. ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை ஏற்படும். வருமானம் வந்தாலும் உடனடியாக செலவாகிவிடும். புதிதாக கடன்வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய உயர்பதவி சகப்பணியாளர்களில் ஒருவருக்கு போய்ச்சேரும். குருவுடன் கூடிய ராகு இப்போது விலகுவதால் இனிமேல் குரு பகவான் கூடுதல் பலம்பெற்றுப் பார்க்கப் போகின்றார். ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக நல்ல பலன்கள் கிடைக்க முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்ளைச் செய்து கொள்வது நல்லது.

குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)

இக்காலம் இனிய காலமாகும். குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்காலில் வக்ரம் பெறும்பொழுது கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால் யோகத்தையே வழங்குவார். ஆரோக்கியத் தொல்லை அகலும். மருத்துவச் செலவு குறையும். மறக்க முடியாத சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக நடைபெற்று மகிழ்ச்சி தரும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். மனக்கிலேசம் மாறும். கோபத்தின் காரணமாக விலகிச்சென்ற குடும்ப உறுப்பினர்கள், பகை மறந்து மீண்டும் வந்திணைவர். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் நேரமிது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குருப்பெயர்ச்சியின் விளைவாகத் தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பிள்ளைகளை நெறிப்படுத்தி உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. குருவின் வக்ர காலத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஏழரைச் சனி நடப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

இல்லத்துப் பூஜையறையில் அஷ்டலட்சுமி படம் வைத்து விளக்கேற்றி லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் நாக தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நல்லது நடக்கும்.


Next Story