மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

நினைத்ததை அடைய நிதானத்தைக் கடைப்பிடிக்கும் மீன ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியம் சீராகும்.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அதாவது லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் அவர். லாப ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரத்தில் தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து வருமானம் உயர வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபாடு கொண்டிருந்தால் அது கிடைக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த முடிவும் எடுக்க இயலாது. அதே நேரத்தில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

உங்கள் ராசிக்கும், பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு, வக்ர நிவர்த்தியானதால் இதுவரை சிக்கனத்தைக் கடைப்பிடித்து வந்த நீங்கள் இனி செலவிற்கு அஞ்சமாட்டீர்கள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தடைகளும், தாமதங்களும் விலகி ஓடும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். உடன்பிறந்தவர்கள் பகை மாறும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதாரத்தில் மித மிஞ்சிய நிலையும் குருவின் சஞ்சாரத்தால் கிடைக்கும்.

தனுசு - புதன் சஞ்சாரம்

கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது வள்ளல்களின் ஒத்துழைப்போடு தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடந்த தொழில் இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். இடம் வாங்கி மனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் கைகூடும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து இணைவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். சகாய ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் பெற்று சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. வருமானப் பற்றாக்குறை ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். வாசல் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.

தனுசு - சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, எதிர்பாராத இழப்புகளையும், விரயங்களையும் சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பெண்வழிப் பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தினர்களின் பகை அதிகரிக்கும். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நேரம் இது. சேமிப்பு கரையும்.

இம்மாதம் நவக்கிரகத்தில் உள்ள ராகு- கேதுக்களை வழிபடுவதன் மூலம் நன்மை களைப் பெறலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 23, 24, 25, 29, 30, டிசம்பர்: 5, 6, 10, 11. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் உங்கள் ராசிநாதன் குரு வக்ர நிவர்த்தியாகிப் பலம்பெற்று விட்டதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன் - மனைவி ஒற்றுமை திருப்தி தரும். இடம், வீடு உங்கள் பெயரில் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பக்கத்தில் இருக்கும் பணியாளர்களும் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். சிலருக்கு இருப்பிட மாற்றங்கள் வந்துசேரும். அதனை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்தித்து முடிவெடுங்கள்.


Next Story