மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை
சகிப்புத் தன்மையால் மனதை வெல்லும் மீன ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே இருக்கிறார். அவரோடு சூரியனும், புதனும் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார்கள். எனவே செல்வாக்கு உயரும். திடீர் மாற்றங்கள் நல்ல விதமாக வந்து சேரும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். இடமாற்றம், வீடு மாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். பற்றாக்குறை அகன்று பணத்தேவை பூர்த்தியாகும்.
இம்மாதம் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு வரும் பங்குனி மாதம் 14-ந் தேதி வரை இருப்பதால் லாபம் வருவதில் ஒருசில சமயங்களில் தடைகள் உருவாகலாம். உதவி கிடைப்பதில் ஒருசிலருக்குத் தாமதமும் ஏற்படலாம். பொறுமையோடு செயல்படுவது நல்லது. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் திருப்திகரமாக இருக்காது. நெருக்கடி நிலை அகல உழைப்பை மட்டுமே நம்ப வேண்டிய நேரம் இது.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலத்தில் வருமானம் திருப்தி தரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். வாகன யோகம் உண்டு. நண்பர்களின் நல் ஆதரவோடு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து, நல்ல காரியம் இல்லத்தில் நடைபெற வழி பிறக்கும்.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் நன்மைகள் ஓரளவு கிடைக்கும். என்றாலும், உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக்கிரகமான சுக்ரன் பலம்பெறுவதால், இன்பமும், துன்பமும் கலந்து இக்காலத்தில் வரும். காலையில் வரவு வந்தால் மாலையில் செலவாகிவிடும். உடன்பிறந்த சகோதரிகளுக்குள் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் உறுதியாகலாம். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காது. ஆனால் வருமானத்திற்கு ஏதேனும் ஒரு வழி பிறக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள், எதையும் யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. வீண் பிரச்சினைகளால் விரயங்கள் உண்டு. வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் இயந்திரப் பழுதுகளையும், எதிர்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும். கலைஞர்களுக்கு போட்டிக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். மாணவ - மாணவிகள், தேவையற்ற நட்புகளைத் தவிர்த்து, தேர்வுகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு எதிர்பாராத செலவு இதயத்தை வாடவைக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் இல்லறம் நல்லறமாக அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 15, 19, 24, 25, 29, 30, ஏப்ரல்: 9, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.