மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

நம்பிக்கையான நண்பர்களைப் பெற்றிருக்கும் மீன ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் ராகுவோடு சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் விதத்தில் அமையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். ஏழரைச் சனி தொடங்கிவிட்டதால், படிப்படியாக புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். இடமாற்றமும், வீடு மாற்றமும் இனிமை தரும் விதம் அமையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

ராகு-கேது சஞ்சாரம்

பின்னோக்கி நகரும் கிரகங்களில் ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், கேது 8-ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். கொடுக்கல் - வாங்கல்களில் சுமுகநிலை உருவாகும். கேது பலத்தால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்தாலும், செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். வருமானப் பெருக்கத்தை முன்னிட்டு புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் சர்ப்ப தோஷம் இருப்பதால் அதற்குரிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் முறையாகச் செய்வது நல்லது.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையைக் கண்ணும், கருத்துமாக செய்வீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு பெருமை காண்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாக நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது.

ரிஷப - புதன்

வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்துசேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. பிரபலமானவர்களின் பின்னணியில் நல்ல காரியங்கள் முடிவடையும். கருத்து வேறுபாடுகள் அகலும். வாரிசுகளின் வளர்ச்சி பெருமைப்படத்தக்கதாக அமையும். உறவினர் வழியில் ஏற்பட்ட பகை மாறும்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். தொழில் புரிபவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்தின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவர்கள் கல்விக்கான உதவி பெற்று பட்ட மேற்படிப்புக்கான வாய்ப்பைப் பெறுவர். பெண்களுக்குத் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. கணவன் - மனைவி ஒற்றுமைக்கு அனுசரணை அவசியம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 20, 23, 24, ஜூன்: 3, 4, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.


Next Story