மீனம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை
நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் மீன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'ராகுவைப் போல் கொடுப்பானுமில்லை' என்பது பழமொழி. அப்படிப்பட்ட ராகுவோடு இணைந்து குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். இருப்பினும் இம்மாதம் உங்கள் ராசிநாதன் குரு வக்ரமடைகிறார். லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் சனியும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாத பிற்பாதியில் பொருளாதாரத்தில் பற்றாக்குறையும், புதிய முயற்சிகளில் தாமதமும் ஏற்படலாம்.
கடக - சுக்ரன்
ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி செலவிடுவீர்கள். சம்பள உயர்வின் காரணமாக ஒருசிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, நீண்ட தூரங்களில் வேலை பார்க்கும் சூழல் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. இல்லத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் திருமண முயற்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி - செவ்வாய்
ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதார மேன்மை ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. வீடு, கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகர - சனி
சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு விரயச் சனியாக இருந்த சனிபகவான் இப்பொழுது லாபச் சனியாக மாறுவார். சனி வக்ர இயக்கத்தில் சஞ்சரித்தாலும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த சனி மாற்றம் ஓரளவு நன்மை செய்யும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
புதன் வக்ர நிவர்த்தி
சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் வக்ரம் பெறுவது யோகம்தான். குடும்ப ஒற்றுமை பலப்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும். இடம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் தாமதப்பட்ட பத்திரப் பதிவு தடையின்றி நடைபெறும். வெளிநாட்டு வணிகம் பலன்தரும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை இலாகா மாற்றங்களும், சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவியர்களுக்கு அதிக முயற்சியும், கல்வியில் கூடுதல் கவனமும் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்குப் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 23, 24, 25, 29, 30, செப்டம்பர்: 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.