மீனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


மீனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:35 PM IST (Updated: 17 May 2022 1:36 PM IST)
t-max-icont-min-icon

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்

இரண்டில் வருகிறது ராகு; எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதே நாளில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திர பாதசாரங்களுக்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.

குடும்ப ஸ்தான ராகு, செலவைக்கூட்டும் கேது

இந்த ராகு-கேது பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு ராகு பகவான் வரப்போகிறார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் அது. எனவே ராகுவால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வரலாம். கொடுக்கல்- வாங்கல்களை ஒழுங்கு செய்வீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எட்டில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பச்சுமை கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உடல்நலக் குறைபாடு ஏற்படும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளலாம். தைரியமும், தன்னம்பிக்கையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம் (21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு மாற்றங்கள் உருவாகும். அது ஊர் மாற்றமாகவும் இருக்கலாம் அல்லது நாடு மாற்றமாகவும் இருக்கலாம். கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். கடன்சுமை குறையும். உறவினர்களுடன் பகை வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 'கட்டிய வீட்டை வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல தகவல் இப்பொழுது வந்து சேரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, மிக மிக கவனம் தேவை. எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். கொடுத்த கடன் வசூலாகாது. குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியிலும் பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்து தொடர்பாக பஞ்சாயத்துகள் முடிவடையாது. 'சேமிப்பு கரைகிறதே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வரவைக் காட்டிலும் செலவு கூடும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். எதிரிகள் பலம் கூடும் இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிட நேரிடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. மேலதிகாரிகளின் பகையால் 'உத்தியோகத்தில் இருந்து விலகலாமா?' என்று சிந்திப்பீர்கள். இக்காலத்தில் திசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடு திருப்தியான வாழ்வைத் தரும்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராகும். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். ஆடை, அணிகலன்களின் சேர்க்கை உண்டு. அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரப் பதவி சிலருக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு தானாக வந்து சேரும். பொருளாதார வளர்ச்சி கூடும். தொழில் நடத்துபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். முன்னோர் கட்டி சிதிலமடைந்த கோவில்களுக்கு திருப்பணி செய்வீர்கள்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சகஜமாகும். அசையாச் சொத்து வாங்குவதில் ஆர்வம் கூடும். கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணையலாம்.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் தொல்லை அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய முதலீடுகளை செய்து, தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் நிறைவேறும். பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். பிற இனத்தாரின் ஆதரவும் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாக முடியலாம்.

குருப்பெயர்ச்சிக் காலம்

இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு செல்லும் குரு, உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். ராசிநாதன் குரு, ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரம்தான். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் உண்டு. பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை அகலும். அடுத்ததாக 22.4.2023 அன்று மேஷ ராசிக்கு செல்லும் குரு, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சனி வரும்பொழுது, ஏழரைச் சனி தொடங்கிவிட்டது. எனவே இனி ஏழரை ஆண்டுகளுக்கு சனியின் ஆதிக்கமும் சேரும். கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். முதலில் விரயச் சனி என்பதால் விரயங்களே அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறைவாகத்தான் கிடைக்கும். நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள பெரும் முயற்சி செய்வார்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும், உடனுக்குடன் விரயங்கள் ஏற்படும். சேமிக்க இயலாது. கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடலாம். வீடு மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் ஒருசிலருக்கு ஏற்படலாம். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றங்கள் வந்துசேரும். கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.


Next Story