தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை
பிறருக்கு உதவ வேண்டுமென்று எண்ணும் தனுசு ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தனாதிபதி சனி வக்ர நிவர்த்தியானதாலும், லாப ஸ்தானம் பலம் பெறுவதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம் - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். லாபாதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகம் என்பதால், லாபம் அனைத்தும் விரயமாகும் சூழல் உருவாகும். எனவே பணத்தை சேமிக்க இயலாது. அதே நேரத்தில் ஜீவன ஸ்தானத்திற்கு சுக்ரன் அதிபதியாக விளங்குவதால், 'பலநாட்கள் வேலை பார்த்தும் பணி நிரந்தரமாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது அனுகூலத் தகவல் வந்துசேரும். அதோடு சம்பள உயர்வும் கிடைக்கலாம்.
துலாம் - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, லாபம் திருப்திகரமாக இருக்கும். தொட்டது துலங்கும். உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு, உடன் இருப்பவர்களும், அதிகாரப் பதவியில் உள்ளவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
மிதுன - செவ்வாய் வக்ரம்
ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதுமட்டுமின்றி செவ்வாயின் பார்வை மகரத்தில் உள்ள சனி மீது பதிகிறது. எனவே மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்புடன் செயல்படவும் முடியாது. பெரிய பொறுப்புகளில் இருந்து திடீரென மாறுதல் கிடைக்கலாம். அனுபவஸ்தர்கள் மற்றும் அருளாளர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவதன் மூலம் இனிமையான வாழ்வை அமைத்துக்கொள்ள இயலும்.
விருச்சிக - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது யோகம் செய்யும். அந்த அடிப்படையில் 12-ல் புதன் வரும்பொழுது பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் உருவாகலாம். பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்த சுபகாரியங்கள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் அதிகரிக்கும். கடன் சுமை காரணமாக இடம், பூமியை விற்க நேரிடலாம். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல்கள் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு நீடிக்கும். சேமிப்பு கரைகின்ற இந்த நேரத்தில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தி ஆவதால் பலம் பெறுகிறார். எனவே உடலும், உள்ளமும் நலமாகும். தொழில் வளம் சிறப்பாகும். வருமானப் பற்றாக்குறை அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே உயர் பதவிகளும், அதற்கேற்ற சம்பள உயர்வும் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரியும் நேரம் இது. எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரரையும், அனுமனையும் வழிபடுவதன் மூலம் இனிய பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 21, 22, 25, 26, நவம்பர்: 2, 3, 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் 'புத சுக்ர யோகம்' செயல்படுவதால், பொருளாதார முன்னேற்றம் உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆரவும் பெருகும். அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள் மாறும். பிள்ளைகள் வழியில் பெருமைகள் கிடைக்கும். செவ்வாய் - சனி பார்வை காலத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத இடமாற்றம், சக ஊழியர்களால் பிரச்சினை உருவாகலாம்.