தனுசு - தமிழ் மாத ஜோதிடம்


தனுசு - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 May 2023 6:45 PM GMT (Updated: 14 May 2023 6:45 PM GMT)

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

இரக்க குணத்தால் பிறர் மனதில் இடம்பிடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை நாடிவரப்போகிறது. தொழில் முன்னேற்றம் உண்டு. தொலை தூரத்தில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வரும் தகவல்கள் ஆதாயம் தருவதாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பாராத விதத்தில் தலைமைப் பதவிகள் தேடிவரலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். மனவலிமையும், பணவலிமையும் பெற்றுள்ள உங்களுக்கு இம்மாதம் இனிய பலன்கள் ஏராளம் நடைபெறும்.

ராகு-கேது சஞ்சாரம்

பின்னோக்கி நகரும் கிரகமான ராகு பகவான் 5-ம் இடத்திலும், கேது பகவான் லாப ஸ்தானத்திலும் வீற்றிருக்கிறார்கள். பஞ்சம ராகுவின் பலத்தால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். உங்களுக்கு கிடைத்த பங்கை விலைக்கு வாங்கிக் கொள்ள பலரும் காத்திருப்பர். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டுப் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபகாரியம் நடைபெறும். ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பில் தடைகள் உருவாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். என்றாலும் குரு பார்வை இருப்பதால் அவ்வப்போது உடல்நலம் சீராக வழி வகுத்துக்கொள்வீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம்பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு, சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். 6-க்கு அதிபதியான சுக்ரன் 12-க்கு அதிபதியான செவ்வாயோடு இணைவதால் மறைமுக எதிர்ப்புகள் மாறும். மகத்தான காரியங்கள் மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்திய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு திருப்தி தரும். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும்.

ரிஷப - புதன்

வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். அதோடு 'தர்ம கர்மாதிபதி யோக'மும் செயல்படுவதால், தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக அமையும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு அற்புதமான நேரம் இது. மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். காரியங்களை உடனடியாக செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புகழ் கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் விலகிச் செல்வர். கலைஞர்களுக்கு யோகமான நேரம் இது. பெண்களுக்கு குடும்பத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு இலாகா மாற்றம் வரலாம்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 27, 28, 31, ஜூன்: 1, 8, 9, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.


Next Story