தனுசு - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


தனுசு - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 7:57 AM GMT (Updated: 17 May 2022 7:59 AM GMT)

(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்

ஐந்தில் வருகிறது ராகு; ஆதரவு கிடைக்கும் இனி தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், மார்ச் 21-ந் தேதி முதல் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதேநேரம் கேது பகவான், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திர பாதசாரங்களுக்கேற்ப பலன்களை வழங்குவார்கள்.

5-ம் இடத்து ராகு, 11-ம் இடத்து கேது

இந்த ராகு-கேது பெயர்ச்சியில், ராகு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்திற்கு வருகிறார். இது பிள்ளைகளைப் பற்றி அறிந்து கொள்ள வைக்கும் இடமாகும். அந்த இடத்திற்கு ராகு வரும்பொழுது பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். 'கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல பொருத்தமான வேலை அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். 11-ம் இடத்திற்கு வரும் கேதுவால் பொருளாதார பற்றாக்குறை அகலும். மூத்த சகோதரர்களால் முன்னேற்றம் உண்டு. பழுதடைந்த வீட்டைப் பராமரிக்கும் பணியைத் துரிதமாகச் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம்(21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, தந்தை வழி உறவு பலப்படும். தொழில் முன்னேற்றம் உண்டு. இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். புதிய வாகனம் வாங்கி பயணிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும். பொதுவாக புதிய முயற்சிகளில் வெற்றியும் ஆதாயமும் கிடைக்கும் நேரம் இது.

சுக்ரன் சாரத்தில் ராகு சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக் கிரகமாகும். அதன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலகட்டத்தில், நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். குணமான நோய் மீண்டும் தலைதூக்கும். கூட்டாளிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். குடும்பச் சுமை அதிகரிக்கும். 'ஆற்றல்மிக்கவர்கள் அருகில் இருந்தாலும் அவர்கள் மூலம் ஒன்றும் செய்ய முடியவில்லையே' என்று கவலைப் படுவீர்கள். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். கல்யாணம் போன்ற சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். உறவினர்கள் பகை மறந்து பாசத்தோடு பழகுவர். உத்தியோகம் சம்பந்தமாக முயற்சி செய்தவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். 'பணிநிரந்தரம் ஆகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது பணிநிரந்தரம் ஆகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஒருசிலருக்கு வீடு மாற்றங்கள் அல்லது இடமாற்றங்கள் ஏற்படலாம்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உங்களுக்கு மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சியும், நண்பர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். பாதியில் நின்ற கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடரும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தலைமைப் பதவிகள் தானாக தேடிவரும்.

ராகு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பயணங்கள் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். இடமாற்றங்கள் இனிமை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்கள், 'நிரந்தர வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லையே' என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து தாய் நாடு திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சி ஏற்படும் விதத்தில் நல்ல தகவல் வரும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

செவ்வாய் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாயின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். பஞ்சம-விரயாதிபதியாக செவ்வாய் விளங்குவதால், விரயங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீடு மாற்றங்களும், நாடு மாற்றங்களும் உறுதியாகலாம். வேற்று மனிதர்களின் ஒத்துழைப்போடு உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இழுபறி நிலையில் இருந்த பஞ்சாயத்துகள் இப்பொழுது நல்ல முடிவிற்கு வரும். கட்டிடத் திறப்புவிழா, கடை திறப்புவிழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் மேற்படிப்பு சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைத்து மகிழ்ச்சியை வழங்கும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு குரு செல்கிறார். அது உங்கள் ராசிக்கு 4-ம் இடம் என்பதால், 'அர்த்தாஷ்டம குரு'வாக செயல்படுவார். எனவே அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஒவ்வொரு காரியத்திற்கும் உழைப்பு அதிகமாக தேவைப்படும். ஆனால் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காது. உடல்நலத்திலும் கவனம் தேவை. அடுத்ததாக 22.4.2023 அன்று மேஷத்திற்கு குரு பெயர்ச்சியாகிறார். அங்கிருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகிறது. தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம், தொல்லை தந்த எதிரிகள் விலகுதல், பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இக்காலத்தில் ஏழரைச் சனி உங்களுக்கு முழுமையாக விலகி விடுகின்றது. எனவே இதுவரை இருந்த மனக்கசப்புகள் மாறும். பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க முன்வருவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்க முன்வருவர்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவுவர். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கணவன் - மனைவி உறவில் அன்பும், ஆதரவும் கூடும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த பணி உயர்வும், சம்பள உயர்வும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு வரலாம். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வியாழக்கிழமை தோறும் குருவை வழிபடுவது நல்லது.


Next Story
  • chat