விருச்சகம் - ஆடி தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் -  ஆடி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 16 July 2023 6:45 PM GMT (Updated: 16 July 2023 6:45 PM GMT)

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை

வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு இணைந்து தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது குரு பகவானின் பார்வை பதிகின்றது. எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அர்த்தாஷ்டமச் சனியும் வக்ர நிலையில் இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிந்து உன்னத வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மேஷ - குரு சஞ்சாரம்

நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப் போகின்றது. குறிப்பாக தன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக நடைபெறும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். நல்ல காரியங்கள் பலவும் நடைபெற நண்பர்கள் வழிகாட்டுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்.

குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அதன் மூலமாக உங்களின் பொருளாதார நிலை உயர வழிபிறக்கும். தொழிலுக்கான கூடுதல் முதலீடுகள் செய்ய, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களும், அதிகார வர்க்கத்தினரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கலைத்துறையில் உள்ளவர்கள் கவுரவிக்கப்படுவர். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வதன் மூலம் உங்களுக்கு புகழ் வந்து சேரும்.எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேற நண்பர்களும், உறவினர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவுவர். பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமிருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.

சிம்ம - புதன்

ஆடி 7-ந் தேதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். கிளைத்தொழில் தொடங்கும் யோகமும் உண்டு. வெளிநாட்டில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்துசேரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். முக்கியப் பிரமுகர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இருமடங்காக உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. கலைஞர் களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நாகரீகப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை கூடும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 24, 30, 31, ஆகஸ்டு: 4, 5, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.


Next Story